புதைமின் வடங்கள் சேதமடைவதை தடுக்க சாலை தோண்டும் பணியை மின் வாரியம் மேற்கொள்ள திட்டம்

X
நுகர்வோருக்கு மின்சாரம் விநியோகிக்க உயரமான கம்பங்களில் மின் கம்பிகள் பொருத்தியும், நிலத்துக்கு அடியில் மின் கம்பிகளை புதைவடங்களாக பொருத்தியும் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. இதில், கிராமப்புற, புறநகர் பகுதிகளில் உயரமான கம்பங்களில் மின் கம்பிகள் வாயிலாக மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால், நகர பகுதிகளில் அதிகப்படியான நெரிசல், உயர்ந்த கட்டிடங்கள் உள்ளதால், பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அங்கே மின் கம்பங்கள் அகற்றப்பட்டு, புதைவட மின் கம்பிகள் பொருத்தப்பட்டன. குறிப்பாக, சென்னை மாநகர் முழுவதும், புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் புதை மின்வடங்கள் மூலம் மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாநகராட்சி, குடிநீர் வாரியம் பணிகளுக்கு சாலை தோண்டும் போது, பல இடங்களில் புதை மின்வடங்கள் சேதப்படுத்தப்படுகின்றன. சேதமாகும் மின்வடங்கள் சரி செய்யப்படாமல் அப்படியே விட்டு செல்லப்படுவதால், மழைக் காலங்களில் மின் விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்ணகி நகரில் பெண் தூய்மைப் பணியாளர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இதை தொடர்ந்து, சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் சேதமடைந்த புதைமின் வடங்களை கணக்கெடுக்க சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், எதிர்காலத்தில் இது போன்ற விபத்துகளை தடுக்க சாலைகளில் பள்ளம் தோண்டும் பணிகளை மின் வாரிய பணியாளர்கள் மூலம் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
Next Story

