வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
X
மந்தித்தோப்பு கிராம மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு ஊராட்சிக்கு உள்பட்ட இந்திரா காலனி, கணேஷ் நகர், துளசிங்க நகர், ராஜகோபால் நகர் ஆகிய பகுதிகளில் நீண்ட காலமாக வீடுகள் கட்டி குடியிருந்து வரும் மக்கள் முறையாக வரி, மின் இணைப்பு கட்டணம் ஆகியவற்றை செலுத்தி வருகின்றனர். இப்பகுதி மக்கள் தாங்கள் வசித்து வரும் வீடுகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதனை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலர் ஜி.பாபு தலைமை வகித்தார். இதில், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ஜி.சேதுராமலிங்கம், தாலுகா குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், எஸ்.மணிகண்டன், நகரச் செயலர் கே.செந்தில் ஆறுமுகம், துணைச் செயலர் ஜி.அலாவுதீன், நகரப் பொருளாளர் ஆர்.சீனிவாசன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.ரெங்கநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச் செயலர் கிருஷ்ணமூர்த்தி உள்பட திரளானோர் கலந்து கொண்டார். பின்னர் அவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில், தங்கள் பகுதிக்கு பட்டா வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் குடியேறும் போராட்டம் நடைபெறும் என கூறினர். கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை பீக்கிலிபட்டி கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் நேற்று நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலர் ஆறுமுகம் தலைமையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ராகவன், கிருஷ்ணவேணி, எட்டயாபுரம் வட்டச் செயலர் ஜீவராஜ், கோவில்பட்டி ஒன்றிய செயலர் தெய்வேந்திரன், கிளைச் செயலர் ஆதிஸ்வரன் மற்றும் கட்சி பிரதிநிதிகள் உள்பட திரளானோர், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். அதைத் தொடர்ந்து போராட்ட குழுவினருடன் ஊராட்சி ஒன்றிய ஆணையர் முத்துக்குமார் நடத்திய பேச்சு வார்த்தையில், பீக்கிலிபட்டி கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்ட பின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.
Next Story