திருச்சுழி அருகே பூமாலைபட்டி குண்டாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர் மற்றும் ஜேசிபி பறிமுதல் செய்து வருவாய்த்துறையினர் நடவடிக்கை*

X
திருச்சுழி அருகே பூமாலைபட்டி குண்டாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட டிராக்டர் மற்றும் ஜேசிபி பறிமுதல் செய்து வருவாய்த்துறையினர் நடவடிக்கை விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களிலும், ஆள் நடமாட்டம் இல்லாத பகல் நேரங்களிலும் மணல் திருட்டு நடைபெறுவதாக பொதுமக்களிடம் இருந்து வருவாய்த்துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் திருச்சுழியில் இருந்து கமுதி செல்லும் சாலையில் பூமாலைபட்டி பகுதியில் உள்ள குண்டாற்றில் மணல் திருட்டு நடப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி திருச்சுழி வட்டாட்சியர் கருப்பசாமி தலைமையில் வருவாய்த்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பூமாலைபட்டி பகுதியில் உள்ள குண்டாற்றில் மர்ம நபர்கள் சிலர் ஜேசிபி இயந்திரம் மூலம் டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டு இருந்தது தெரிய வந்தது. மேலும் வருவாய்த்துறை அதிகாரிகளைக் கண்டவுடன் மணல் அள்ளிய நபர்கள் டிராக்டர் மற்றும் ஜேசிபி இயந்திரத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர். இந்த நிலையில் வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறையினர் அந்த டிராக்டரை சோதனை செய்தபோது அதில் சுமார் ஒரு யூனிட் அளவுக்கு ஆற்று மணல் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து டிராக்டர், டிரைலர் மற்றும் ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர் அவற்றை போலீசார் உதவியுடன் திருச்சுழி காவல் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் போலீசார் விசாரணையில், மணல் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் செம்பொன்நெருஞ்சி கிராமத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி தங்கப்பாண்டி என்பதும், பதிவெண் எதுவும் இல்லாத டிராக்டரில் மணல் திருடியதும் தெரிய வந்தது. இதனையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் அழகர்சாமி கொடுத்த புகாரின் பேரில் திருச்சுழி போலீசார் ஜேசிபி, டிராக்டர் உரிமையாளர் தங்கப்பாண்டி மற்றும் டிராக்டர் டிரைவர் ராமகிருஷ்ணன், ஜேசிபி இயந்திரத்தை இயக்கிய 15 வயது சிறுவன் உள்ளிட்ட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
Next Story

