ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
25- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் முகமது இலியாஸ் தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ளிட்ட 1500 க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர் பணியிடங்கள் மற்றும் ஜீப் ஓட்டுநர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், இரவுக் காவலர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் உடனே நிரப்ப வேண்டும். ஊராட்சி செயலாளராகப் பணியாற்றி 1996 க்கு பிறகு இளநிலை உதவியாளராகப் பணியேற்றவர்களுக்கு ஊராட்சி செயலாளர் பணிக்காலத்தில் 50 சதம் ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ள அரசாணை பிறப்பிக்க வேண்டும்.25 ஆண்டுகளுக்கும் மேலாக ஊராட்சி செயலர்களாக பணிபுரிந்து பதவி உயர்வு பெற்று புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஊராட்சி செயலர் பதவிக்கான சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும். 7 ஆண்டுகள் பணிமுடித்துள்ள பணிமேற்பார்வையாளர்கள் அனைவரையும் இளநிலை பொறியாளர் நிலைக்கு உயர்த்திட வேண்டும். பணி மேற்பார்வையாளர் நிலையிலிருந்து உதவிப் பொறியாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும். 100 நாள் கணினி உதவியாளர்கள் மற்றும் எஸ்பிஎம் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கணினி உதவியாளர்கள் மற்றும் எஸ் .பி .எம் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரையும் குழு காப்பீடு திட்டம் மற்றும் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைக்க வேண்டும். 100 நாள் திட்டத்திற்கு மற்ற மாநிலங்களில் உள்ளதுபோன்று வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் பணியிடம் ஏற்படுத்திட வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தினை ரத்து செய்து ஊராட்சி செயலர் உள்ளிட்ட அனைவருக்கும் பயனளிக்கும் பழைய ஒய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.மாநில தலைவர் இளங்குமரன், மாவட்ட செயலாளர் தருமன், பொருளாளர் வினோத்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் பிரின்ஸ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தெய்வானை வாழ்த்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story




