கோவையில் வாக்கு மோசடி எதிர்ப்பு கையெழுத்து இயக்கம் !
வாக்கு திருட்டு மோசடிக்கு எதிராக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தமிழக காங்கிரஸ் சிறுபான்மை துறையினர் சார்பில் கையெழுத்து இயக்கம் கோவையில் நடைபெற்றது. போத்தனூரில் நடைபெற்ற இந்த இயக்கத்தை மாநில சிறுபான்மை துறை தலைவர் முகம்மது ஆரீஃப் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதில், “நாடு முழுவதும் வாக்கு மோசடி குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதாரங்களுடன் போராடி வருகிறார். பா.ஜ.க அரசு சிறுபான்மை, தலித் மக்களின் வாக்குரிமையை பறிக்கும் விதமாக திட்டமிட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்படுகிறது” என்று குற்றம்சாட்டினார். தமிழகத்தில் 2 கோடி கையெழுத்துகள் பெறும் இலக்குடன் காங்கிரஸ் கட்சி இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாகவும், சிறுபான்மை துறையின் சார்பில் குறைந்தது 3 இலட்சம் கையெழுத்துகள் சேகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர் பஷீர், மாவட்டத் தலைவர்கள் ஹாரூன், அசார் மற்றும் நிர்வாகிகள் ஹாரிஸ், ஈஷா, தனபால், ரியாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story



