அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஜெயங்கொண்டம் சோழன் சிட்டி உதவியுடன் வெல்டிங் ஒர்க்ஸ் உரிமையாளரின் உடல் தானம்.

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஜெயங்கொண்டம் சோழன் சிட்டி உதவியுடன் வெல்டிங் ஒர்க்ஸ் உரிமையாளரின் உடல் தானம்.
X
ஜெயங்கொண்டத்தில் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்த காயத்ரி வெல்டிங் ஒர்க்ஸ் உரிமையாளர் நடராஜனின் உடல் அவர் குடும்பத்தினரின் ஒப்புதலோடு சோழன் சிட்டி உதவியுடன் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
அரியலூர், செப்.27- ஜெயங்கொண்டம் சோழன் சிட்டி உதவியுடன் வெல்டிங் ஒர்க்ஸ் உரிமையாளரின் உடல் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானம் செய்யப்பட்டது. ஜெயங்கொண்டத்தில் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்த வெல்டிங் ஒர்க்ஸ் உரிமையாளரின் உடலை உறவினர்கள் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கினர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் நடராஜன்(80) இவர் ஜெயங்கொண்டம் விருத்தாச்சலம் ரோட்டில் காயத்ரி வெல்டிங் ஒர்க்ஸ் கடை நடத்தி வந்தார். மேலும் இவர் சிறந்த வாஸ்து வல்லுனர் ஆவார்.இந்நிலையில் இவர் வயது மூப்பின் காரணமாகவும், கடந்த சில மாதமாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் திடீரென  உயிரிழந்தார். இவருக்கு செந்தில்குமார் என்ற மகனும், கௌரி, துர்காதேவி, காயத்ரி என மூன்று மகள்களும் உள்ளனர்.   இந்நிலையில் இவர் மிகுந்த சாமி பக்தி உடையவராகவும்,வாஸ்து பார்ப்பதில் வல்லவராகவும் இருந்த அவர் உயிரோடு இருக்கும் பொழுது தனது குடும்பத்தினரிடம் மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோரிடம் தான் இறந்த பிறகு தனது உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார். அதன்படி உயிரிழந்த நடராஜனின் உடலுக்கு உறவினர்கள் செய்ய வேண்டிய இறுதி சடங்கை செய்த நிலையில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தியதையடுத்து அவரது குடும்பத்தினர் நடராஜனின் உடலை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு  ஜெயங்கொண்டம் சோழன் சிட்டி லயன் சங்கம் நிர்வாகிகள் பி.ஜி.ஆர் நகை மாளிகை உரிமையாளர் ரமேஷ்குமார், ஆர்.கே.செல்வமணி, பரபிரம்மம் பவுண்டேஷன் முத்துக்குமார் ஆகியோர் உதவியுடன் முழு மனதோடு தானம் செய்தனர்.  அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து வந்த மருத்துவர்கள் நடராஜனின் உடலை மருத்துவக் கல்லூரிக்கு வாங்கி சென்றனர். நடராஜனின்  உடல் பதப்படுத்தப்பட்டு மருத்துவ மாணவர்களின் கல்விக்கு பயன்படுத்தப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தான் இறந்த பிறகும் தனது உடல் நூற்றுக்கணக்கான மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என நினைத்த நடராஜனின் எண்ணம் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. ஜெயங்கொண்டத்தில் முதன் முறையாக நடராஜனின் உடல் தானம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து நடராஜனின் மகன் செந்தில்குமார் கூறும்போது தனது தந்தை ஆசைப்படி தந்தையின் உடல் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானம் செய்யப்பட்டது. இதுபோன்று அனைவரும் உடல் உறுப்புகளையும், உடலையும் தானம் செய்ய முன்வர வேண்டும், பல உயிர்கள் உயிர் பெறும்,மேலும் உடலை தானம் செய்வதால் மருத்துவ கல்லூரி மாணவர்கள் மருத்துவ ஆராய்ச்சிக்கு பயன்படுத்துவார்கள் எனவும் அவர் இவ்வாறு கூறினார்.
Next Story