கரூரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று கனிமொழி எம்பி ஆறுதல்!

கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரிடம் திமுக துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நலம் விசாரித்தார். தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கருணாநிதி எம்.பி; யாராக இருந்தாலும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கடைபிடிக்க வேண்டும். பாதுகாப்பு மட்டுமே அரசு கொடுக்கும். அதுபோல கூட்டத்திற்கு வரும் மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றை அந்தந்த கட்சிகள் தான் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். விஜய் பிரசாரத்தில் 40 பேர் உயிரிழந்தது நீங்காத வடுவாக உள்ளது. அரசு நிகழ்ச்சிகளுக்கு அரசாங்கம் பொறுப்பு ஏற்கும்; கட்சி நிகழ்ச்சி என்று வரும்போது கட்சிதான் பொறுப்பு ஏற்க வேண்டும். நெரிசலில் சிக்கியவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். எந்தவொரு கட்சி நிகழ்ச்சி என்றாலும் கட்டுப்பாடுகள் இருக்கும். சமீபத்தில் கூட இதே கரூரில் திமுகவின் முப்பெரும்விழாவை மாவட்ட செயலாளர் நடத்தினார். ஆளும் கட்சியான திமுகவுக்கும் கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவுக்கு நிபந்தனைகளுடனே அனுமதி வழங்கப்பட்டது. விஜய்யின் பிரசார கூட்டத்திற்கு போதுமான காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது. மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு காவல்துறை கூறும் அறிவுறுத்தலை அரசியல் தலைவர்கள் ஏற்பது வழக்கம். கரூரிலும் அதுபோல் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. நான் அரசியல் பேச விரும்பவில்லை. யார் மீது பழிபோடுவது என்றெல்லாம் நாங்கள் இல்லை. அப்படி நினைத்திருந்தால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவு 1 மணிக்கு இங்கு வந்திருக்க மாட்டார். எங்கள் பிரதிநிதிகள் இங்கே களத்தில் இறங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பாக இருந்திருக்க மாட்டார்கள். இதில் சதி செய்யவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை; யார் கட்சி என்பதெல்லாம் இங்கு தேவையில்லை. தமிழ்நாட்டு மக்களை பாதுகாப்பது, முதல்-அமைச்சரின் பொறுப்பு. அரசியல் காழ்ப்போடு, கீழ்த்தரமான விமர்சனங்களுக்கு பதில் சொல்வது சரியாக இருக்காது என்று பேசினார்.
Next Story