தைலாபுரம் உபகார அன்னை ஆலய திருவிழா!

X
நாசரேத் அருகே உள்ள தைலாபுரம் பரிசுத்த உபகார அன்னை ஆலய திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது. திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை 5.30 மணிக்கு ஜெபமாலை, நவநாள் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடந்தது. 9 ம் திருவிழாவான நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருவிழா சிறப்பு மாலை ஆராதனை மறை மாவட்ட முதன்மை க்குரு ரவிபாலன் தலைமையில் நடந்தது.சங்கரன்கோவில் வட்டார முதன்மைக்குரு. ஜோசப் கென்னடி மறையுரை ஆற்றினார். இரவு 10 மணிக்கு உபகார அன்னை மற்றும் புனிதர்களின் சப்பர பவனி நடந்தது. 10 ம் திருவிழாவான நேற்று ( சனிக்கிழமை )அதிகாலை 3 மணிக்கு சப்பர நற்கருணை ஆசீர் நடந்தது. காலை 6.30 மணிக்கு ஜெபமாலை, திருவிழா ஆடம்பரக் கூட்டுத்திருப்பலி மறை மாவட்ட முதன்மைக்குரு ரவிபாலன் தலைமையில் நடந்தது. பாளையங்கோட்டை தூய சவேரியார் கலைக்கல்லூரி முதல்வர் காட்வின் ரூபஸ் மறையுரை ஆற்றினார். இதனை தொடர்ந்து காலை 10 மணிக்கு திருமுழுக்கு வழங்குதல் நிகழ்ச்சியும், காலை 11 மணிக்கு புனிதர்களின் சப்பர பவனியும் நடந்தது.இதில் திரளானோர் பங்கேற்றனர்.மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, நற்கருணை பவனியும், இரவு 9 மணிக்கு கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடந்தது. இதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு நெல்லை எஸ்ஆர் சந்திரன் குழுவினரின் ஸ்டார்னைட் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை தைலாபுரம் பரிசுத்த உபகார அன்னை ஆலய பங்குத்தந்தை ராபின் ஸ்டான்லி தலைமையில் திருவிழா நிர்வாகி அந்தோணி வினோத், ஒருங்கிணைப்பாளர் மனோகரன், டிரஸ்ட் நிர்வாகிகள் ராஜபாண்டி, வில்லியம், ரவீந்திரன், கிறிஸ்டோபர், சிலுவை முத்துக்குமார் மற்றும் விழாக்குழுவினர், பங்கு இறை மக்கள் செய்திருந்தனர்.
Next Story

