ஜெயங்கொண்டம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கட்டிய கடனுக்கு நோட்டீஸ் அனுப்பியதை கண்டித்து கூட்டுறவு வங்கியை பூட்டி விவசாயிகள் முற்றுகை போராட்டம்

ஜெயங்கொண்டம்  அருகே  தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கட்டிய கடனுக்கு  நோட்டீஸ் அனுப்பியதை கண்டித்து கூட்டுறவு வங்கியை பூட்டி  விவசாயிகள் முற்றுகை போராட்டம்
X
ஜெயங்கொண்டம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கட்டிய கடனுக்கு நோட்டீஸ் அனுப்பியதை கண்டித்து கூட்டுறவு வங்கியை பூட்டி விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
அரியலூர், செப்.29- ஜெயங்கொண்டம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கட்டிய கடனுக்கு நோட்டீஸ் அனுப்பியதை கண்டித்து கூட்டுறவு வங்கியை பூட்டி விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பலகோடி வரை ஊழல் செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க விட்டால் விவசாயிகளை திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்துவதாகவும் எச்சரிக்கை விடுத்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தழுதாழைமேடு கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் கடந்த 2022 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு நபர் ஒன்றுக்கு ரூ 25 ஆயிரம் வரை விவசாய கடன் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடன் பெற்று வாங்கிய கடனை முழுமையாக அடைத்து முறைப்படி ரசிது வைத்துள்ளதாகவும் தெரிகிறது. அதற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு வங்கி சார்பில் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கடனுக்கு வட்டியோடு கடனை செலுத்துமாறு வங்கி சார்பில் கடனை அடைத்த விவசாயிகளுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் திரண்டு வங்கி நிர்வாகத்தை அணுகி கேட்டபோது உரிய பதிலளிக்கவில்லை. மேலும் வங்கி செயலாளர் மற்றும் அதிகாரிகள் வரை பல கோடி முறைகேட்டில் ஈடுபட்டு ஊழல் செய்து இருப்பதும் விவசாயிகளுக்கு தெரிய வந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் நேற்று தழுதாழைமேடு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி முன்பு திரண்டனர். அப்போது வங்கியை பூட்டி முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், நிலுவையில் இருப்பதாக கூறும் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடனை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அடுத்த கட்டமாக சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாகவும் அரசுக்கு எச்சரிக்கை செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story