நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

X
கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் 8-வது முகாம் கணபதிபுரம் பேரூராட்சி மேலசங்கரன்குழி எள்ளுவிளை, ராஜாக்கமங்கலம், கணியாகுளம் ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு அனந்தநாடார்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று முன்தினம் நடந்தது. முகாமை கலெக்டர் அழகுமீனா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், "கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 7 முகாம்கள் நடைபெற்றுள்ளன. அதில் 3 ஆயிரத்து 873 ஆண்களும், 9 ஆயிரத்து 260 பெண்களும் என மொத்தம் 13 ஆயிரத்து 133 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். உயர் சிகிச்சை தேவைப்படுவோருக்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிந்துரை செய்யப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். முகாமில் டோக்கன் வழங்கும் பகுதிகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த அதிக கவுண்ட்டர்கள் ஏற்படுத்த வேண்டும். முகாமிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு தேவையான இருக்கை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்" என்றார். இந்த நிகழ்ச்சியில் குமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் லியோ டேவிட், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சகாய ஸ்டீபன்ராஜ், மாவட்ட சுகாதார அலுவலர் அரவிந்த் ஜோதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story

