கரூர் சம்பவம் தொடர்பான அனைத்து வீடியோக்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் – செந்தில் பாலாஜி !
கரூரில் நடந்த சம்பவம் தொடர்பாக வெளியாகும் அனைத்து வீடியோக்களும் விசாரணை ஆணையம் மூலம் விசாரிக்கப்படும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தி.மு.க கோவை மாநகர் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட துரைசெந்தமிழ் செல்வன் நேற்று பொறுப்பேற்றார். இதனை முன்னிட்டு காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே பெரியார், அண்ணா, கலைஞர் சிலைகளுக்கு அவர் மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சித் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, “கரூர் சம்பவம் குறித்து விசாரணை ஆணையத்தின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்த பிறகு அதைப் பற்றி பேசுவது சரியாக இருக்கும். தற்போது வெளியாகும் அனைத்து வீடியோக்களும் விசாரணை ஆணையம் மூலம் ஆராயப்படும் என்றார். மேலும், அரசு இதனை வைத்து அரசியல் செய்வதாக கூறுவது தவறு. ஏற்கனவே அரசின் சார்பில் முழு விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. விசாரணை முடிந்து இறுதி அறிக்கை வந்த பின் அதன்படி பேசுவோம், என்றும் கூறினார். செய்தியாளர்களை நோக்கி, எதிர்புறத்திலும் கேள்விகள் கேட்க வேண்டும் சுய பரிசோதனை அவசியம், எனவும் குறிப்பிட்டார்.
Next Story



