ஆண்டவன் உத்தரவு: சிவன்மலை முருகன் கோயிலில் மண் கலசத்தில் கடல் நீர் வைத்து பூஜை

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி மலைக்கோயில் உத்தரவு  பெட்டியில்  இன்று முதல் மண் கலசத்தில் கடல் நீர் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
காங்கேயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற திருத்தலம் ஆகும். சிவன் மலை கோவில் சிறப்புகளில் பிரசித்தி பெற்றது ஆண்டவன் உத்தரவு பெட்டியாகும். நாட்டில் ஏற்படும் இன்னல்கள், மகிழ்ச்சிகளை முன்னதாகவே உணர்த்துவதால் மூலவருக்கு காரணம் மூர்த்தி என்ற பெயரும் உண்டு. சிவன்மலை ஆண்டவர் பக்தர்கள் கனவில் வந்து குறிப்பால் உணர்த்தி அது சம்பந்தமான பொருட்களை உத்தரவு பெட்டியில் வைப்பது தொன்றுதொட்டு வழக்கத்தில் இருந்து வருகின்றது. பக்தர்கள் கனவில் தோன்றி கூறிய பொருளை மக்கள் கொண்டு வந்தால் மேற்படி பொருளை உத்தரவு பெட்டியில் வைக்கலாமா என சுவாமியிடம் அர்ச்சகர்கள் மற்றும் அறநிலையத்துறை ஊழியர்கள் வெள்ளை மற்றும் சிவப்பு பூ வைத்து உத்தரவு கேட்பார்கள். அவ்வாறு கேட்கும் பொழுது வெள்ளை பூ விழுந்து அனுமதி கிடைத்தால் ஏற்கனவே உள்ள பொருள் மாற்றப்படுகிறது. இதுவரை இங்கு மண், துப்பாக்கி, ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு, நோட்டுப் புத்தகம், சைக்கிள், அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம், சர்க்கரை, பூமாலை, இரும்பு சங்கிலி, ருத்ராட்சம் என பல்வேறு பொருட்களை வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது.  இந்த நிலையில் கோயம்புத்தூரைச் சேர்ந்த பவானி என்ற பெண் பக்தர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரம் சென்றுள்ளார் அப்போது அந்த பெண் பக்தரின் கனவில் வந்தது. சனிக்கிழமை கடல் நீர் வைத்து பூஜை செய்ய ஆண்டவன் கூறியதாகவும் இதை அடுத்து அந்த பெண் பக்தர் கொண்டுவந்து சிவன்மலையில் உள்ள சிவாச்சாரியர்களிடம் கொடுத்து பூ கேட்ட பின் பூஜை செய்யப்பட்டு, மேற்கண்ட கடல் நீர் மண் கலயத்தில் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன், கடந்த மார்ச் 6 ஆம் தேதி முதல் இன்று வரை கண்ணாடிப் பெட்டிக்குள் கற்பூரம் மற்றும் பிரம்பு வைக்கப்பட்டிருந்தது. இன்னொரு பக்தரின் கனவில், அடுத்த பூஜைப் பொருள் வரும் வரையில், கண்ணாடிப் பெட்டிக்குள் கடல் நீர் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story