நல்லம்பள்ளியில் தேமுதிக சார்பில் பிரச்சாரக் கூட்டம்

உள்ளம் தேடி இல்லம்நாடி நிகழ்ச்சியில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சார பேருரை
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி, பாளையம்புதூர் ஆகிய இடங்களில் நேற்று தேமுதிக சார்பில் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ என்ற தலைப்பில் பிரச்சாரக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை இரவு நடந்தது. நல்லம்பள்ளியில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: 2026 சட்டப் பேரவை தேர்தலில் நாம் வென்று வரும்போது மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் நிறைய உள்ளது. ஆட்சியில் இருந்தவர்களும், இருப்பவர்களும் தொடர்ந்து மக்களை ஏமாற்றி வருகின்றனர். தர்மபுரியில் சிப்காட் அமைத்தார்கள். ஆனால், 2 ஆண்டுகளாகியும் அங்கே தொழிற்சாலைகளோ, வேலை வாய்ப்புகளோ எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. ஒகேனக்கல் காவிரி உபரிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டால் தான் மாவட்டத்தில் விவசாயத்தை நம்பியுள்ளவர்கள் ஏற்றம் காண முடியும். காவிரி உபரி நீர் திட்டம் குறித்து அனைவரும் பொய் வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றி வருகின்றனர். தெருவுக்கு 10 டாஸ்மாக் கடைகள் தான் ஆட்சியாளர்களின் சாதனை. தமிழகத்தை போதை தமிழகமாக மாற்றியுள்ளனர். எதிர்காலத்தை நினைத்தால் அச்சமாக உள்ளது. மக்கள் அரசை நோக்கி கேள்வி எதுவும் கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவே வறுமையிலும், போதையிலும் வைத்துள்ளனர். படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் வேலை வாய்ப்பு, லஞ்சம்-ஊழல் இல்லாத ஆட்சி, பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சி வேண்டும். கேப்டனைப் போல் மக்களை நேசித்த தலைவர் யாருக்கும் இல்லை. கரூரில் 41 பேர் உயிரிழப்புக்கு காரணம் ஆட்சியாளர்களும், தவெக தலைவர் விஜய்யும் தான். அங்கே மிஸ்டர் 10 ரூபாய் என ஒருவர் உள்ளார். அவர் தான் இந்த சம்பவத்துக்கு முக்கிய காரணம். ஆட்சியில் இருக்கும் மமதையில் ஆடுகிறார்கள். கரூர் சம்பவம் மூலம் வெற்றி பெற்று விட்டதாகக் கருதும் ஆளும் கட்சிக்கு, உயிரிழந்த 41 பேரின் உயிர் பெரும் மாற்றத்தை தரும். கரூர் சம்பவம் நடந்தபோது விஜய் அங்கேயே இருந்து மக்களை சந்தித்து ஆறுதல் கூறாமல் சென்றது தவறு. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அண்மையில் திருவண்ணாமலையில் போலீசாரே 2 பெண்களை சிதைத்துள்ளனர். 2026 தேர்தல் நமக்கு மிக மிக முக்கியம். எனவே, அனைவரும் இணைந்து நின்று தேர்தலை சந்திப்போம். கடலூரில் தேமுதிக சார்பில் விரைவில் நடைபெறவுள்ள மாநாட்டுக்கு கட்சியினர் திரண்டு வர வேண்டும். இவ்வாறு பேசினார்.முன்னதாக, கரூரில் உயிரிழந்த 41 பேரின் உருவப்படங்களுக்கு பிரேமலதா மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், கட்சியின் மாநில அவைத் தலைவர் மருத்துவர் இளங்கோவன், பொருளாளர் சுதீஷ், தர்மபுரி மாவட்ட செயலாளர்கள் குமார், விஜயசங்கர் ஒன்றிய செயலாளர் விக்னேஷ் நகர செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story