கோவையில் தமிழகத்தின் நீளமான அவிநாசி சாலை மேம்பாலம் திறப்பு – நாளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!

X
கோவை மாவட்டம் அவிநாசி சாலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த போக்குவரத்து நெரிசலைத் தீர்க்கும் நோக்கில், ரூ.1,791.23 கோடி மதிப்பில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோமீட்டர் நீளத்தில் 4 வழிச் சாலை கொண்ட உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலம் தமிழ்நாட்டின் மிக நீளமான மேம்பாலமாகும். இதில் மொத்தம் 304 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலே 4 வழிச் சாலை மற்றும் கீழே 6 வழிச் சாலை என மொத்தம் 10 வழித்தடங்கள் கொண்டது. அண்ணாசிலை, பீளமேடு, ஹோப் காலேஜ், விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் ஏறுதளம், இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. ஹோப் காலேஜ் சந்திப்பில் ரயில்வே மேம்பாலம் மீது 725 டன் எடை கொண்ட 52 மீட்டர் இரும்பு கார்டர் பொருத்தப்பட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு செய்யப்பட்டு, அதிர்வு மற்றும் சத்தம் குறைக்கும் “சைனஸ் பிளேட்” தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கோவை நகரிலிருந்து விமான நிலையம் செல்லும் நேரம் 45 நிமிடத்திலிருந்து 10 நிமிடமாக குறைகிறது. 2020-ல் தொடங்கிய இந்தத் திட்டத்தின் 5% மட்டுமே நிறைவு பெற்ற நிலையில், திராவிட மாடல் அரசு பொறுப்பேற்று மீதமிருந்த 95% பணிகளையும் விரைந்து முடித்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாளை (அக்.9) இந்த அவிநாசி சாலை மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கிறார். மேலும், இந்தப் பாலத்திற்கு புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் ஜி.டி. நாயுடுவின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
Next Story

