குமாரபாளையத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு

குமாரபாளையம் அருகே நடைபெற்ற பரப்புரையில் இன்று எங்கள் பரப்புரை நடைபெறுமா என சந்தேகத்தில் இருந்த பொழுது நம்பிக்கையூட்டியவர் தங்கமணி என்று தெரிவித்தார்
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணத்தில் இன்று திருச்செங்கோடு தொகுதியில் மக்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அடுத்ததாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சானார்பாளையம், குமாரபாளையம் மெயின் ரோடு திறந்த வெளி மைதானத்தில் கூடியிருந்த ஏராளமான மக்களிடையே பேசினார். “திமுக தலைமையிலான கூட்டணி வலிமையானது, வென்றுவிடலாம் என்று ஸ்டாலின் நினைக்கிறார். அது வெற்றிக் கூட்டணி அல்ல வெற்றுக்கூட்டணி. வெல்லுகின்ற கூட்டணி நம்முடைய கூட்டணி. ஸ்டாலின் அவர்களே கூட்டணியை நீங்கள் நம்பியிருக்கிறீர்கள், கூட்டணி தேவைதான், அதிமுக கூட்டணி வலுவாக உள்ளது. பிள்ளையார் சுழி போட்டாச்சு, குமாரபாளையம் ஆரவாரம் உங்கள் செவியை துளைத்திருக்கும். உங்கள் கனவு கானல் நீராகத்தான் போகும். உங்கள் ஆட்சியில் மக்கள் துன்பம், துயரம்தான கண்டனர், 53 மாத ஆட்சியில் மக்களுக்கான திட்டமில்லை. இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கி நம்மை கடனாளியாக்கியதுதான் உங்கள் சாதனை. 2011-21 வரை பொற்கால ஆட்சி கொடுத்தோம், சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. திமுக ஆட்சியில் சிறுமி முதல் பாட்டிவரை மக்களுக்கே பாதுகாப்பில்லை. தங்க விலை நிலவரம் போல திமுக ஆட்சியில் கொலை நிலவரம் அறிவிக்கிறார்கள். போதைப் பொருள் கஞ்சா பல்வேறு ரூபத்தில் விற்கிறது. பலமுறை நாங்கள் குரல் கொடுத்தோம், இளைஞர்கள் அடிமையாகி சீரழிகிறார்கள் என்று தடுத்து நிறுத்தச் சொன்னோம், ஆனால் கண்டுகொள்ளவில்லை. இன்றைக்கு முதல்வர் போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்கிறார், அதாவது எல்லோரும் போதைக்கு அடிமையாகி சீரழிந்து குடும்பமே நாசமாகிய பின்னர் ஞானோதயம் வந்து சொல்கிறார்கள். நாங்கள் சொல்லும்போதே நடவடிக்கை எடுத்திருந்தால் தடுத்திருக்கலாம். இன்று போதைப் பொருள் நிறைந்த மாநிலமாகிவிட்டது. அதிமுக ஆட்சி அமைந்ததும் போதைப் பொருள் நடமாட்டம் தடுக்கப்படும், சட்டம் ஒழுங்கு சீர்செய்யப்படும். அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. இன்று சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. குமாரபாளையம் பகுதியில் கைத்தறி, விசைத்தறி, விவசாயம் மூன்று தொழில்கள்தான் பிரதானம். இந்த மூன்று தொழிலும் இன்று சரிந்து மக்கள் வாழ முடியாத சூழலில் உள்ளனர், ஒவ்வொரு நாளும் செத்துச்செத்துப் பிழைக்கிறார்கள். தொழிலாளிகளுக்குப் பாதுகாப்பில்லை, வறுமையால் உடல் உறுப்பை விற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால், சிறந்த ஆட்சி நடப்பதாக ஸ்டாலின் சொல்கிறார். உண்மை என்னவென்றால், வறுமை காரணமாக உறுப்புகளை விற்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. திமுக எம்.எல்.ஏ மருத்துவமனையில் கிட்னி முறைகேடு நடப்பதாக திமுக அரசு அமைத்த குழுவே அறிக்கை கொடுத்தது. அங்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தடை விதித்துள்ளனர், ஆனால், யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனை மதுரை உயர்நீதிமன்றக் கிளை கடுமையாக சாடியிருக்கிறது. இதற்கு என தனி அதிகாரிகள் அமைக்கப்பட்டு, ஒரு மாதம் மேலாகிறது, ஆனால் இன்னமும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. ஏனெனில் திமுக எம்.எல்.ஏ. என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை. அண்மையில் கரூரில் 41 பேர் பலியானார்கள், அதற்கு இரவோடு இரவாக போகிறார், குழு அமைக்கிறார், வேகமாக விசாரிக்கிறார். இங்கே ஒரு நியாயம், அங்கே ஒரு நியாயமா? கிட்னி முறைகேட்டை ஏன் விசாரிக்கவில்லை, கரூர் சம்பவத்தை அவசர அவசரமாக விசாரிக்க வேண்டிய தேவை என்ன? இதில் தான் உள்நோக்கம் இருக்கிறது. இதெல்லாம் நீதிமன்றத்தில் இருப்பதால் ஆழமாகப் பேசமுடியவில்லை. ஒருநபர் கமிஷன் அமைத்த பிறகு யாரும் வெளியில் தகவல் சொல்லக் கூடாது என்பது நியதி. ஆனால் திமுக அரசு கமிஷன் அமைத்து, அதிகாரிகளை வைத்து பேட்டி கொடுக்க வைக்கிறார்கள். அரசு அதிகாரிகள், திமுகவின் கைகூலியாக மாறிவிட்டார்கள். கையை காட்டியிருந்தால் பிரச்னை ஏற்பட்டிருக்காது என்று சொல்கிறார்கள். இதை சொல்லவா உங்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது, உங்கள் பணியை நீங்கள் செய்யுங்கள், அரசியல்வாதிகள் அரசியல் செய்யட்டும். அதிகாரிகள் அரசியல் பேசக்கூடாது. ஏடிஜிபி சம்பவம் பற்றி பேசுகிறார். டிஎஸ்பி தலைமையில் விசாரணை நடக்கும்போது ஏடிஜிபி ஒரு கருத்து சொல்கிறார் என்றால், அதன்படிதானே டிஎஸ்பி நடப்பார்? பிறகு எப்படி விசாரணை சரியாக நடைபெறும்? இதன் மூலம் திட்டமிட்டு சதி செய்கின்ற செயல் அம்பலமாகிவிட்டது. 41 உயிரிழப்புக்கு நியாயமாக தீர்ப்பு கிடைக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அதனால்தான் சிபிஐ விசாரணை வேண்டுமென்று கேட்கிறோம், பாதுகாப்பு குறைபாடு இருப்பதாகச் சொல்கிறார்கள். இது காவல்துறை தொடர்பான குற்றச்சாட்டு. இதனை காவல்துறையே விசாரித்தால் நியாயம் கிடைக்குமா? கிடைக்காது. இதில் மக்களுக்கு உண்மை தெரியவேண்டும். உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு 10ம் தேதி வருகிறது, நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று எண்ணுகிறோம், ஒட்டுமொத்த தமிழ் மக்களுடைய எண்ணம் உச்சநீதிமன்றத் தீர்ப்பு மூலம் நிறைவேறும் என்று நம்புகிறோம், இந்த சதித் திட்டத்திற்கு யார் பொறுப்பாளர்களோ, அவர்கள் இந்த சம்பவத்துக்கு பொறுப்பாளர்கள் என்பதை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன். 10 ரூபாய் பற்றி சொன்னால்தான் மக்களுக்கு மன நிறைவு கிடைக்கிறது. அந்தளவுக்கு மக்கள் பாதிப்பு அடைந்துவிட்டனர், செந்தில் பாலாஜி அவர்களே நான் சொல்வது சரியல்ல என்கிறீர்கள், ஆனால், மக்கள் இதையே பேசுகிறார்கள், மக்கள் குரலாகத்தான் நான் ஒலித்துக்கொண்டிருக்கிறேன். மக்கள் எண்ணத்தின் அடிப்படையில்தான் எங்கள் கூட்டணி செயல்படுகிறது. மக்கள் கருத்து நீங்கள் தவறு செய்திருக்கிறீர்கள். தமிழ்நாடு முழுவதும் 6 ஆயிரம் மதுக்கடை, டாஸ்மாக்கில் ஒரு நாளைக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெறுவதால் நாளொன்றுக்கு 15 கோடி ரூபாயும், மாதத்துக்கு 450 கோடி ரூபாயும், வருடத்துக்கு 5400 கோடியுமாக இந்த நான்காண்டுகளில் 22 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார்கள். இப்படி கொள்ளையடிக்கும் அரசு தொடர வேண்டுமா? ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த தொகுதிக்கு எதாவது செய்திருக்கிறாரா? அதிமுக ஆட்சியில் பல திட்டம் கொடுத்தோம், ஒரு முக்கிய திட்டம் நீண்ட நெடிய திட்டம், இது விசைத்தறிகள் நிறைந்த பகுதி. சாயம் எல்லாம் சுத்திகரிக்க வேண்டும், அப்போதுதான் ஆலை செயல்பட முடியும். இங்கு ஆலைக்கழிவுகள் நதியில் கலப்பதால் தண்ணீர் பாழாகிறது. அதனால் நான் முதல்வராக இருந்தபோது பிரதமரை சந்தித்து நடந்தாய் வாழி காவிரித் திட்டம் செயல்படுத்க்த கோரினேன். மேட்டூரில் திறக்கப்படும் நீர் கடலில் கலக்கும் வரை சுத்தமாக ஓடுவதற்கான திட்டம். அதை பிரதமர் ஒப்புக்கொண்டார். மாநிலங்களவை, மக்களவை கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையில் இடம்பெறச் செய்தார். ஆட்சி மாறியதும் திமுக அரசு கவலைப்படவில்லை, நான் வலியுறுத்தியதன் காரணமாக கடந்தாண்டு 12,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். மேட்டூரில் இருந்து கடலில் கலக்கும் வரை, கரையோரமுள்ள குமாரபாளையம், பவானி, ஈரோடு - பள்ளிப்பாளையம், இப்படி பல நகரங்களில் இருந்து வெளியேறும் நீரை பேபி கனால் அமைத்து, அசுத்த நீரெல்லாம் சுத்தப்படுத்தி ஆற்றில் விடப்படும். நீண்டகாலமாக இந்த கோரிக்கை வைத்திருந்தனர். பவானியில் இருந்து வருகின்ற நீர் கூடுதுறையில் சங்கமமாகிறது, அமராவதி வெளியேறும் நீர் சுத்தப்படுத்தி அமராவதியில் விடப்படும், நொய்யல் ஆற்றில் கலக்கும் கழிவுநீர் சுத்தப்படுத்தி விடப்படும், காவிரியில் ஒரு சொட்டு கலப்படம் இல்லாத சுத்தமான நீர் கொடுக்க நடவடிக்கை எடுத்தோம். இப்படி இந்த திமுக அரசு ஒரு திட்டமாவது கொண்டுவந்ததா? குடிக்கும் நீர் சுத்தமாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் நோய் ஏற்படும். அதை கருத்தில்கொண்டு நிதி ஒதுக்கிய பிரதமருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். பள்ளிப்பாளையம் முதல் ஈரோடு வரை காவிரி ஆற்றின் குறுக்கே 30 கோடியில் பாலம் கட்டினோம், எஸ்பிபி காலனி ரயில்வே பாதை உட்பட மேம்பாலம் 44 கோடியிலும், எஸ்பிபி பேப்பர் மில் கீழ்பாலம் 22 கோடியிலும் கட்டினோம். குமாரபாளையம் நகராட்சி பூமிக்கடியில் மின்பாதை அமைக்க 200 கோடி கொடுத்தோம், திருச்செங்கோடு முதல் ஈரோடு நான்குவழிச்சாலை 424 கோடியில் பள்ளிப்பாளையம் வழியாக அமைத்தோம், குடிநீர் பணிக்காக 400 கோடியில் திட்டம் கொடுத்தோம், நானே அடிக்கல் நாட்டினேன். குமாரபாளையத்தில் புதிய தாலுகா அறிவித்தோம். கலை அறிவியல் கல்லூரி 10 கோடியில் கொண்டுவந்து ஏழை மக்கள் குறைந்த கட்டணத்தில் பட்டப்படிப்பு படிக்க வழிவகை செய்தோம். குமாரபாளையத்தில் தீயணைப்பு நிலையம், குமாரபாளையம் தாலுகா போக்குவரத்து அலுவலகம், மேட்டூர் கிழக்கு கரை கால்வாய் கான்கிரீட் கால்வாயாக மாற்றப்பட்டது, குடிமராமத்துத் திட்டம் மூலம் ஏரி, குளம், குட்டை தூர்வாரப்பட்டது, விவசாயிகளுக்கு இரண்டு முறை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. அம்மா மினி கிளினிக் கொண்டுவந்தோம். அதில் ஒரு எம்பிபிஎஸ் மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் பணியில் அமர்த்தி, கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தோம். இது ஸ்டாலினுக்குப் பொறுக்கவில்லை. திமுக அரசு ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் காழ்ப்புணர்ச்சி பார்த்து, கிளினிக்கை மூடிவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் 4000 அம்மா மினி கிளினிக் திறக்கப்படும். திருச்செங்கோடு முதல் குமாரபாளையம் ரயில் கிராசிங் குறுக்கே புதிய பாலம் கட்டிக்கொடுக்கப்படும், குமாரபாளையத்தில் சுத்திகரிப்பு நிலையம் கேட்டுள்ளீர்கள், அதுவும் கொடுக்கப்படும். துணை கண்காணிப்பாளர் அலுவலகம் கேட்டுள்ளீர்கள். அதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். ஏழை மக்கள், விசைத்தறி, கைத்தறி தொழிலாளிகள் விவசாய தொழிலாளி, அருந்ததியர் மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மலைவாழ், மீனவ மக்களுக்கு மனை இருந்தால் அதில் அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும். அருந்ததியர் வாரிசுகள் தனிக்குடித்தனம் சென்றாலும் ஒவ்வொருவருக்கும் கான்கிரீட் வீடு கட்டிக்கொடுக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும். இந்த சேலை விசைத்தறியில் நெய்யப்பட்டு அவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும். கைத்தறி நெசவாளர்கள் திமுக ஆட்சியில் திருமண உதவித் திட்டம், தாலிக்குத் தங்கம் திட்டம் நிறுத்தப்பட்டது, அது தொடர்ந்து செயல்படுத்தப்படும், அதோடு மணப்பெண்ணுக்கு பட்டுச்சேலை, மணமகனுக்கு பட்டுவேட்டி கொடுக்கப்படும். இந்த பட்டுசேலை, பட்டுவேட்டி கைத்தறி நெசவாளர்களிடம் கொடுத்து, கொள்முதல் செய்யப்படும். அதிமுக ஆட்சியில் மக்களுக்கு வரி உயர்த்தாமல் பார்த்துக்கொண்டோம். இன்று குடிநீர் வரி, வீட்டு வரி, கடை வரி என எல்லா வரிகளையும் 100% முதல் 150% வரை உயர்த்திவிட்டனர். போதாக்குறைக்கு குப்பைக்கும் வரி போட்ட ஒரே அரசு திமுக அரசுதான். மின்கட்டணம் இந்த ஆட்சியில் 67% உயர்த்திவிட்டனர். திமுக தேர்தல் அறிக்கையில், ஆட்சிக்கு வந்தவுடன் நிதி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டு, வாங்கிய கடன் திருப்பிச் செலுத்தப்படும், வருவாய் அதிகரிக்கப்படும் என்றனர். திமுகவின் நான்காண்டுகளில் 4 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டனர். இந்தாண்டு ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்குகிறார்கள். ஐந்தாண்டு முடியும் தருவாயில் 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் இருக்கும். இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் திமுக அரசு முதன்மை மாநிலம். மக்கள் தான் பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும், வரி வாங்கி கடனை அடைக்கும் நிர்வாகத் திறமையற்ற அரசு ஸ்டாலின் அரசு. ஆனால், அதிமுக ஆட்சி இப்படி இல்லை, நிறைய பாலம், சாலை, கல்லூரி கொண்டுவந்தும் இவ்வளவு கடன் வாங்கவில்லை, 73 ஆண்டுகால தமிழக ஆட்சி வரலாற்றில் எத்தனையோ அரசுகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. 2021ம் ஆண்டு வரை ஒட்டுமொத்தமாக இருந்த கடன் 5 லட்சத்து 15 ஆயிரம் கோடி மட்டுமே, ஆனால் அதைவிட திமுகவின் இந்த ஐந்தாண்டுகால கடன் சுமை அதிகம். 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி. இது, எவ்வளவு மோசமான ஆட்சி என்று சிந்தித்துப் பாருங்கள் மக்களை கடன் காரர்களாக ஆக்கியதுதான் சாதனை. விலைவாசி உயர்ந்துவிட்டது, மக்கள் வாங்கும் சக்தியை இழந்துவிட்டனர், தறி ஓடவில்லை, வருமானம் இல்லை. விலைவாசியைக் கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை. அதிமுக ஆட்சியில் விலைவாசி உயரும்போது விலை கட்டுப்பாட்டு நிதி என்று 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, அதன்மூலம், அண்டை மாநிலங்களில் எங்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக மக்களுக்குக் கொடுத்தோம். ஏழைகளுக்காக பல்வேறு நடவடிக்கை எடுத்தோம், கொரோனா காலம் கூட விலை ஏறவில்லை. கொரோனா காலத்தில் ஓராண்டு ரேஷனில் விலையில்லா பொருட்கள் அரிசி, சர்க்கரை, எண்ணெய் கொடுத்தோம், குடும்ப அட்டைக்கு 1000 ரூபாய் கொடுத்தோம். கர்ப்பிணி தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் என நாளொன்றுக்கு 7 லட்சம் பேருக்கு அம்மா உணவகம் மூலம் மூன்று வேளை உணவு கொடுத்தோம். அதேயாண்டு தைப் பொங்கலை அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாட பொங்கல் பரிசு 2500ரூபாய் கொடுத்தோம். கொரோனா காலத்தில் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு நடத்தினோம், சிறப்பாக தேர்வெழுதி பட்டம் பெற்றனர். பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஆல் பாஸ் போட்டுக்கொடுத்தோம். எடப்பாடி பழனிசாமி ஒரு பஸ் எடுத்துகிட்டு ஊர் ஊராகப் போகிறார், எங்க பிங்க் கலர் பஸ்ஸை எடுத்துக்கிட்டு அதை சைடு வாங்கிட்டு போயிருவோம் என்று உதயநிதி பேசினார். பிங்க் கலர் பஸ் ஓட்டை உடைசல் பஸ்ஸாகவே இருக்கிறது. மழை காலத்தில் குடையை புடிச்சிகிட்டுத்தான் பஸ்ஸில் போகவேண்டும். இன்று படிக்கட்டு கழன்றுவிட்டது, டயர் ஒரு பக்கம் கழன்றுகொண்டுபோகுது. இப்படி ஒரு மோசமான பிங்க் பஸ் கண்டிஷனில்தான் திமுக இருக்கிறது. 2026 அல்ல 2031 ல் கூட எங்க பஸ்ஸை பிடிக்க முடியாது. இது கண்டிஷனான பஸ், மக்கள் ஆதரவு பெற்ற பஸ். கரூரில் ஒரு துயர சம்பவம் நடந்தது. மக்களுக்கு என்ன உதவி செய்யவேண்டும் என்று துணை முதல்வர் நினைக்கவில்லை. வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் போனார், துயரத்தைக் கேள்விபட்டு திருச்சிக்கு தனி விமானத்தில் வந்தார், மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தினார், நேராக திருச்சி சென்று மீண்டும் துபாய் போய்விட்டார், இவரெல்லாம் துணை முதல்வராக இருப்பதற்கு தகுதி இருக்கிறதா? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லை. இங்கிருந்து சிகிச்சை அளிப்பதற்கு உதவிகள் செய்தால் நல்ல துணை முதல்வர் என்று சொல்லலாம். இப்படிப்பட்டவர்கள் நாட்டை ஆள வேண்டுமா? இவர் வீட்டில் இப்படி சம்பவம் நடைபெற்றால் இப்படித்தான் வெளிநாடு போவாரா? ஏதோ சந்தடி சாக்குல ஆட்சிக்கு வந்துவிட்டீர்கள். இப்போது, நீங்கதானே பொறுப்பு, அதை தட்டிக்கழித்து சுற்றுலா போகிறீர்கள் என்றால் மக்கள் மீது அக்கறை உள்ளதா? இப்படிப்பட்டவர்களுக்கு தேர்தலில் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் என்று நான்காண்டு கழித்து மக்களிடம் வந்திருக்கிறார் முதல்வர். வீடு வீடாக அதிகாரிகள் வருகிறார்கள். மக்களிடம் இருக்கும் 46 பிரச்னைகள் பற்றி மனு கொடுத்தால் அதனை நிறைவேற்றிக் கொடுப்பார்களாம். இன்னும் 7 மாதத்தில் ஆட்சி முடியப்போகிறது. அதற்குள் நிறைவேற்ற முடியுமா? மக்களின் பிரச்னையை தீர்க்கத்தான் முதல்வர், ஆனால் மக்களுக்கு பிரச்னை இருக்கிறது என்பதையே இப்போதுதான் கண்டுபிடித்திருக்கிறார். இதற்காக இவருக்கு நோபல் பரிசே கொடுக்கலாம். இதேபோல எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது புகார் பெட்டி என்று ஒரு திட்டம் கொண்டுவந்து மனுவை வாங்கி பிரச்னையை தீர்ப்பேன் என்றார், தீர்த்தாரா? அடுத்தாண்டு தேர்தல் வருவதால் மக்களை ஏமாற்றி வாக்குகள் பெறவே நாடகம் நடத்துகிறார். உங்களுடன் ஸ்டாலின் மனு சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஆற்றில் கிடக்கிறது, புதுக்கோட்டையில் வடை கட்டிக் கொடுக்குறார்கள். சதுரங்க வேட்டை படத்தின் வசனம் போன்று ஆசையைத் தூண்டி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று மீண்டும் அட்சிக்கு வரவே இப்படி விளம்பரம் செய்கிறார்கள். அத்தனை பேரும் பத்திரமாக வாகனத்தில் சென்று சேர வேண்டும். 2026 தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற வையுங்கள். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின்” என்று முடித்தார்.
Next Story