ஆயிரம் எல்பிஜி டேங்கர் லாரிகளை இயக்க ஒரு தரப்பினர் முடிவு ! நாமக்கல்லில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவிப்பு .

X
Namakkal King 24x7 |11 Oct 2025 7:24 PM ISTவேலைநிறுத்தத்தை புறக்கணித்துவிட்டு, சுமார் 300 உறுப்பினர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளை இயக்க முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான தகவலை மெயில் மூலமாக சம்பந்தப்பட்ட ஆயில் நிறுவனங்களுக்கு அனுப்பி விட்டோம்.
சதர்ன் ரீஜன் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் நடைபெற்று வரும் சூழலில், ஒரு தரப்பினர் சுமார் ஆயிரம் லாரிகளை இயக்க சனிக்கிழமை முடிவு செய்துள்ளனர். தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களை உள்ளடக்கி தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதன் கட்டுப்பாட்டில் 5,500 டேங்கர் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தியன் ஆயில் நிறுவனம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு 2025-2030 ஆம் ஆண்டுக்கான டேங்கர் லாரிகள் ஒப்பந்தம் சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இதில், 3,500 லாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றிருந்த நிலையில், 2,800 லாரிகளுக்கு மட்டும் எண்ணெய் நிறுவனங்கள் அங்கீகார கடிதம் வழங்கின. மீதமுள்ள 700 டேங்கர் லாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்கக் கோரி, கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் -9) முதல் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த சங்கத்தில் உறுப்பினராக உள்ள 300க்கும் மேற்பட்டோர், வேலைநிறுத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து,நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள டேங்கர் லாரி சங்க அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனர். அங்கிருந்த நிர்வாகிகளுடன் எதிர் தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் மெயில் அனுப்பப்பட்டு வரும் தகவல்கள் குறித்து கேட்டனர். அதற்கு சரியான பதில் அளிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து, எதிர் தரப்பைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.... தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தரராஜன் ஒருதலை பட்சமாக செயல்படுகிறார். மூன்று எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் கூறப்படும் தகவல்களை தெரிவிக்க மறுக்கிறார்.தற்போதைய நிலையில் வேலைநிறுத்தத்தை புறக்கணித்துவிட்டு, சுமார் 300 உறுப்பினர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளை இயக்க முடிவு செய்துள்ளோம். இது தொடர்பான தகவலை மின்னஞ்சல் மூலமாக சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுப்பி விட்டோம் என்றார்.
Next Story
