கரூர் வழக்கில் சிபிஐ விசாரணை உத்தரவு – வானதி சீனிவாசன் வரவேற்பு

X
கரூர் மாநாடு மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை வரவேற்ற பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “இது தமிழக காவல்துறை முழுமையாக தோல்வியடைந்ததைக் காட்டுகிறது” என விமர்சித்தார். கோவை புலியகுளத்தில் “தாய்மை” என்ற பெயரில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான விழிப்புணர்வு முகாமை துவக்கி வைத்து பேசிய அவர், திராவிட மாடல் அரசு பெண்களுக்கு எதிரான ஆட்சி எனவும், மத்திய அரசு திட்டங்களுக்கு உரிய நிதி மாநில அரசு பயன்படுத்தவில்லை எனவும் குற்றம்சாட்டினார். திமுக ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பு குறைந்து வருவதாகவும், தேர்தல் நெருங்கும் போது மட்டுமே உதவித்தொகை வழங்குவதாகவும் கூறிய அவர், “மக்கள் இந்த அரசு போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர்” என்றார். கரூர் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது குறித்து, “இதன் மூலம் உண்மை வெளிவரும்; இதில் சம்பந்தப்பட்டவர்கள் எவ்வளவு பெரிய அதிகாரிகள் இருந்தாலும் மக்கள்முன் நிறுத்தப்படுவார்கள்” என்றார். திமுக ஆட்சி கீழ் கரூர் மாவட்டத்தில் அரசியல் அழுத்தம், அதிகார துஷ்பிரயோகம் அதிகமாக இருப்பதாகவும், ரௌடிசம் மேலோங்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். தவெக தலைவர் விஜயின் கருத்துகள் குறித்து கேட்டபோது, “உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது — அதனை அவர் மதிக்கட்டும். சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைத்து உண்மை வெளிவர விஜய் ஆதரவு தர வேண்டும்” என்றார். அதிமுக–பாஜக கூட்டணி குறித்து, “தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது; மேலும் பல வலுவான தலைவர்கள் வரப் போகிறார்கள்” என குறிப்பிட்டார். ஜாதிப் பெயரில் ஊர், தெரு பெயர்கள் நீக்க அறிவிப்பு குறித்து, “அப்படி செய்தால் கோவையில் பெரும்பாலான ஊர்களுக்கு பெயரே இருக்காது” என அவர் நகைச்சுவையுடன் விமர்சித்தார். மேலும், சட்டமன்றத்தில் கரூர் சம்பவம் குறித்து கூட்டணி ஒருமித்த முடிவை எடுத்து செயல்படும் என்றும், வருகிற 28ஆம் தேதி துணைக் குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவை வருகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story

