திருக்குவளை உட்கோட்டத்தில் வட கிழக்கு பருவமழையை முன்னிட்டு

X
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, நாகப்பட்டினம் நெடுஞ்சாலைத்துறை சார்பில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம் கோட்டப் பொறியாளர் ராஜேஷ்கண்ணா அறிவுறுத்தலின் பேரில், மழை மற்றும் வெள்ளப் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க மாவட்டம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திருக்குவளை உட்கோட்டத்திற்குட்பட்ட ஆலங்குடி, திருக்குவளை, அகரவெளி, எட்டுக்குடி சாலை ஆகிய 4 இடங்களில் 2,500 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இப்பணிகளை, திருக்குவளை உதவிக்கோட்டப்பொறியாளர் அய்யாதுரை, உதவிப்பொறியாளர் உமாமகேஸ்வரி ஆகியோர் மேற்பார்வை செய்து வருகின்றனர். மழை நீர் தேக்கம் மற்றும் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மணல் மூட்டைகளை வைத்தும், சாலை ஓரங்களில் நீர்வழி பாதைகளை சீரமைத்து முன்னேற்பாடு பணிகள் தயார் நிலையில் உள்ளன. மேலும், மழை மற்றும் பலத்த காற்றால் மரங்கள் விழும் அபாயத்தைத் தடுக்கும் வகையில், சாலை ஓரங்களில் காய்ந்த மரக்கிளைகளை அகற்றும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக, மரம் அறுக்கும் இயந்திரங்கள் முழுமையாக பராமரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவசர காலங்களில் பயன்படுத்துவதற்காக ஜேசிபி இயந்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன. மழை காலத்தில் திடீர் வெள்ளம், சாலை சேதம் மற்றும் போக்குவரத்து தடைகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நாகப்பட்டினம் கோட்ட அளவில் மொத்தம் 10 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

