சத்துணவு ஊழியர்களை மிரட்டி தீபாவளி வசூல் செய்யும் சத்துணவு அமைப்பாளர்

X
நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு உரிமைகள் நலச் சங்கத் தலைவரும், நாகை மாவட்ட வளர்ச்சி குழும தலைவருமான என்.பி.பாஸ்கரன், நாகை மாவட்ட ஆட்சியர், மாவட்ட ஆட்சியரின் (சத்துணவு) நேர்முக உதவியாளர் ஆகியோருக்கு அனுப்பி உள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது நாகை மாவட்டம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில், சத்துணவு அமைப்பாளராக பணிபுரிபவரும், சத்துணவு ஊழியர் சங்க மாநில பொருளாளருமான ஒரு பெண் ஊழியர், தன்னிடம் இருக்கும் பண பலத்தினாலும், செல்வாக்கினாலும் தன்னை போன்று பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர்களிடமும், சொற்ப ஊதியம் (ரூ.5 ஆயிரம்) பெறும் சமையலர் மற்றும் உதவியாளர்களிடமும் சங்கம் என்ற பெயரில் மிரட்டி பணம் பறித்து, திருமருகல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அவருக்கு கீழ் பணிபுரியும் அனைத்து நபர்களுக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதிய ஆடைகள் எடுத்து தர, சத்துணவு ஊழியர்களின் ஊதியத்திலேயே மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் தீபாவளி அட்வான்ஸ் தொகையை அவரவர் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்றும், கருவூல அலுவலருக்கு லஞ்ச பணமாக ஒவ்வொரு சத்துணவு அமைப்பாளர்களிடமும் தலா ரூ.300 மற்றும் சமையலர், உதவியாளர் ஆகியோரிடம் தலா ரூ.200-ம் என, திருமருகல் ஒன்றியத்தில் உள்ள 95 சத்துணவு மையங்களிலும் மிரட்டி பணம் தர வலியுறுத்தி, அந்த பெண் ஊழியர், தாதா போல் மனசாட்சி இல்லாமல் பேசிய ஆடியோ, என்னுயிர் நண்பர்கள் என்ற பெயரில் சத்துணவு அலுவலர்களுக்கே உரிய அந்த பெண் ஊழியரால் உருவாக்கப்பட்ட whats app group-ல் பகிரப்பட்டுள்ளது. நாகை மாவட்ட ஆட்சியரிடம் சங்கம் என்ற பெயரில் அந்த பெண் ஊழியர் செய்யும் அட்டூழியங்கள் குறித்து புகார் செய்தும் உடனடி நடவடிக்கை இல்லை. அந்த பெண் ஊழியரின் கணவர், மாவட்ட ஆட்சியரின் (சத்துணவு) நேர்முக உதவியாளரிடம் கார் டிரைவராக பணி புரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவர், தன் மனைவி தொடர்பாக வரும் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் செய்து விடுவார் என சத்துணவு ஊழியர்கள் அஞ்சுகின்றனர். இந்த பெண் ஊழியரின் அடாவடி நடவடிக்கையால்,திருமருகல் ஒன்றிய சத்துணவு ஊழியர்களின் பாடு பெரும்பாடாக உள்ளது. லஞ்சத்தை ஊக்குவிக்கும் அந்த பெண் ஊழியர் மற்றும் அலுவலர்களின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இத்தகைய கொடுமைகளை வெளியில் சொன்னால், சமையலர், உதவியாளர் போன்ற ஊழியர்களுக்கு அடுத்தடுத்த பதவி உயர்வுகள் அந்த பெண் ஊழியரால் இடையூறு செய்யப்படும் என அஞ்சுகின்றனர். எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த பெண் ஊழியரை சஸ்பெண்ட் செய்து, சத்துணவு ஊழியர்களை மன ஊளைச்சலின்றி பணியாற்ற உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story

