லஞ்சம் பெற்ற பஞ்சாயத்து செயலாளர், ஊழியர் கைது!

₹19,000 லஞ்சப் பணம் பெற்றபோது பஞ்சாயத்து செயலாளர் மற்றும் உதவியாளர் கைது.
கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள மசக்கவுண்டன் செட்டிபாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தின் செயலாளர் ரங்கசாமி மற்றும் அவரது உதவியாளர் பூபதி ஆகியோர் வீட்டுமனை அங்கீகாரம் வழங்க லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர். மூக்கனூரைச் சேர்ந்த ராஜபிரபாகரன் என்பவர் தனது வீட்டுமனைக்கு அங்கீகாரம் கோரி விண்ணப்பித்த போது, செயலாளர் ரங்கசாமி முதலில் ₹15,000 லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. பின்னர் மேலும் ₹19,000 கேட்டதால், அதிருப்தியடைந்த ராஜபிரபாகரன் கோவை லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து அனுப்பினர். ரங்கசாமி தனது உதவியாளர் பூபதியிடம் பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார். பூபதி பணத்தை வாங்கும் போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story