தீபாவளி முன்னிட்டு கோவையில் கடுமையான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் !

தீபாவளி முன்னிட்டு கோவையில் கடுமையான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் !
X
தீபாவளி விழாவை முன்னிட்டு கண்காணிப்பு கோபுரங்கள், சிக்னல் அமைப்பு, செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் மூலம் கண்காணிப்பு தீவிரம்.
தீபாவளியை முன்னிட்டு கோவை மாநகர காவல்துறை பரவலான பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வழக்கமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன், கூடுதலாக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெடிகுண்டு தடுப்பு பிரிவு மற்றும் குற்றத் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நகரம் முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர். முன்னாள் குற்றவாளிகள் மீதும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. கிராஸ்கட் சாலை, ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, இடையர் வீதி, வைசாள் வீதி போன்ற பரபரப்பான பகுதிகளில் சீருடை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிரமாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒப்பணக்கார வீதியில் உள்ள போதிஸ் ஜவுளிக்கடை அருகே கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்கள் பொருட்களை பாதுகாப்பாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சிக்னல்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. உப்பிலிபாளையம் ரவுண்டானா மற்றும் கோல்ட்வின்ஸ் பகுதிகளில் வாகன நெரிசலை குறைக்கும் வகையில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சிக்னல்கள் அமைக்கப்பட்ட பின் போக்குவரத்து நெரிசல் குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.வாமேம்பாலத்தில் இருந்து இறங்கும் வாகனங்களுக்கு நேரடி வழிகள் ஏற்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தேவையற்ற சுற்றுப்பாதைகள் தவிர்க்கப்படுமாறு சாலைகளில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. கூகுள் மேப்பில் சிவப்பு நிறமாகக் காணப்படும் நெரிசல் பகுதிகளை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். பாலத்தின் வழியாக 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கு மேல் வேகத்தில் செல்லும் வாகனங்களை செயற்கை நுண்ணறிவு (AI) கேமராக்கள் மூலம் கண்காணித்து வழக்குகள் பதிவு செய்யப்படும். போக்குவரத்து நெரிசல் குறைய நெடுஞ்சாலை பொறியாளர்களுடன் இணைந்து சேவைச் சாலைகள் விரிவுபடுத்தப்படுகின்றன. பொதுமக்கள் மேம்பாலத்தை எச்சரிக்கையுடன், குறித்த வேகத்தில் மட்டுமே பயன்படுத்துமாறு கோவை மாவட்ட காவல் ஆய்வாளர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.
Next Story