அரசுப் பள்ளிக்கு விடுமுறை அளித்துவிட்டு முகாம் நடத்துவதா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்

அரசுப் பள்ளிக்கு விடுமுறை அளித்துவிட்டு முகாம் நடத்துவதா? - திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்
X
அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்தலாம் என்ற அகம்பாவம் திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது என்று அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திருப்பத்தூர் ஜோலார்பேட்டை அருகே உள்ள தாமலேரி முத்தூர் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, திமுக அரசின் உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்காக இன்று விடுமுறை அளித்திருக்கிறார்கள். ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாக, எந்தத் துறை நிர்வாகத்தையும் கவனிக்காமல், வெற்று விளம்பரங்களிலேயே நாட்களைக் கடத்தி விட்டு, தற்போது, ஆட்சி முடியும் தருவாயில், முகாம் நடத்துகிறோம், குறை தீர்க்கிறோம் என்று, அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் அனைத்தையும் செயலிழக்கச் செய்து கொண்டிருக்கிறார்கள். நான்கு ஆண்டுகளாக எந்தச் செயல்பாடும் இல்லாமல் தமிழக அரசு இயந்திரம் முடங்கிக் கிடந்தது என்பதற்கு, இப்போது அவசர அவசரமாக ஆங்காங்கே நடக்கும் கண்துடைப்பு முகாம்களே சாட்சி. அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்தலாம் என்ற அகம்பாவம் எங்கிருந்து வருகிறது திமுக அரசுக்கு? உங்கள் கையாலாகாத்தனத்துக்கு, அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களைப் பலிகடா ஆக்குவதா? ஏற்கெனவே திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் அரசுப் பள்ளிக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்தியதை, நாங்கள் கண்டித்த உடன், இனி இப்படி நடைபெறாது என்று உறுதியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், இவற்றை எதையும் கண்டுகொள்ளாமல், மாதம்தோறும் வெளிநாட்டுச் சுற்றுலாவில் பிசியாக இருக்கிறார். ஏற்கெனவே முகாம்களில் பெற்ற மனுக்களை, வைகையாற்றில் மிதக்க விட்டுவிட்டு, எதற்கு இந்த வெட்டி விளம்பரம் முதல்வரே? என தெரிவித்துள்ளார்.
Next Story