கோவில்பட்டி பகுதியில் கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி!

X
கோவில்பட்டி பகுதியில் மழை பெய்து வருவதால் மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. ஓரிரு நாட்கள் மட்டும் மழை பெய்த நிலையில், வெப்பம் வாட்டி வந்தது. அதேசமயம், இப்பகுதி விவசாயிகள் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளத்தை விதைத்து விட்டு, பருவமழைக்காக காத்திருக்கின்றனர். இந்தநிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அக்.19-ந்தேதி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் சாரல் மழை பெய்தது. நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 12.50 மணியளவில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து மதியம் 2.30 மணி வரை கனமழை கொட்டியது. இந்த மழையால், கோவில்பட்டி மெயின் ரோடு, புதுரோடு விலக்கு, மந்தித்தோப்பு ரோடு, மார்க்கெட் ரோடு, ரெயில் நிலையம் முன்புள்ள ரோடுகளிலும் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. ஆறு போல் ஓடிய மழை நீரில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடியே ஊர்ந்து சென்றன. சாலைகளில் நடந்து சென்ற மக்கள் குடைகளை பிடித்த படியும், மழைக்கோட்டு அணிந்தபடியும் சென்றனர். இதேபோன்று, இனாம்மணியாச்சி, லிங்கம்பட்டி, கடலையூர், சித்தங்குளம், ஈராச்சி, துறையூர் உள்பட சுற்றுவட்டார கிராமங்களிலும் மழை பெய்தது. இந்த மழையால் பொதுமக்களும், மக்காச்சோள விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story

