பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் பரமத்தி ஒன்றியத்தில் ரூ.66.18 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட வில்லிபாளையம், பில்லூர், நல்லூர், கோலாரம் ஆகிய பகுதிகளில் ரூ.66.18 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் பரமத்தி ஊராட்சி ஒன்றியம், வில்லிபாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், சின்னையன் என்பவர் நிலத்தில் ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் தனிநபர் கிணறு அமைத்துள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பயனாளியுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, பில்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, மாணவ, மாணவியர்களுக்கு வழங்க தயாராக இருந்த மதிய உணவினை ருசித்து பார்த்தார். மேலும் பள்ளியின் வளாகத்தில் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளின் எடை, உயரம், வருகை குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்து, குழந்தைகளுடன் கலந்துரைடியாடினார். அதனைத் தொடர்ந்து, அதே பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.17.25 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டுமான பணிகளையும், நல்லூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.29.70 இலட்சம் மதிப்பீட்டில் கிராம ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டு வருவதையும், கோலாரம் கிராமத்தில் நீர்நிலைகளை ஆழப்படுத்துதல் திட்டத்தின்கீழ் ரூ.9.23 இலட்சம் மதிப்பீட்டில் கரிச்சிபாளையம் ஏரி ஆழப்படும் பணி நடைபெற்று வருவதையும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து கரிச்சிப்பாளையம் நியாயவிலைக்கடையில் ஆய்வு மேற்கொண்டு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் இருப்பு, தரம் மற்றும் பராமரிக்கப்படும் பதிவேடு ஆகியவற்றை பார்வையிட்டார்.
Next Story