திமுக- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு குறித்து கட்சியின் தலைமை முடிவு செய்யும்: கே.வி.தங்கபாலு பேட்டி...

திமுக- காங்கிரஸ்  இடையே தொகுதி பங்கீடு குறித்து கட்சியின் தலைமை முடிவு செய்யும்: கே.வி.தங்கபாலு பேட்டி...
X
திமுக- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு குறித்து கட்சியின் தலைமை முடிவு செய்யும்: கே.வி.தங்கபாலு பேட்டி...
திமுக- கூட்டணி கட்சிகளுக்கிடையே தேர்தல் தொகுதி பங்கீடு குறித்தும், ஆட்சியில் பங்கு குறித்தும் கட்சியின் அகில இந்திய தலைமை முடிவு செய்யும் என முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான கே.வி.தங்கபாலு குறிப்பிட்டார். இந்தியா முழுவதும் காங்கிரஸ் கமிட்டியின் சொத்துக்கள் குறித்து ஆய்வு செய்ய அகில இந்திய காங்கிரஸ் உத்தரவிட்டுள்ள நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை வழிகாட்டுதலில் தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸ் கமிட்டியின் சொத்துகளை ஆய்வு செய்து ஆவணப் படுத்துவதற்காக முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவருமான கே.வி.தங்கபாலு தலைமையிலான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்பு குழுவினர் தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு குழுவினர் ராசிபுரம் நகர காங்கிரஸ் கமிட்டி சொத்துகளை நேரில் பார்வையிட்டு புதன்கிழமை ஆலோசனை நடத்தினர். இகூட்டத்தில் நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஸ்ரீராமுலு ஆர்.முரளி வரவேற்றுப் பேசினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழு உறுப்பினர்கள் நிதின் குல்பர்கர், முன்னாள் எம்பி., எஸ்.எஸ்.ராமசுப்பு, முன்னாள் எம்எல்ஏ., பழனிசாமி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர் டி.செல்வம், கட்சியின் மாநில துணைத் தலைவர் செழியன், நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் பி.ஏ.சித்திக், முன்னாள் தலைவர் பாச்சல் ஏ.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.வி.தங்கபாலு கூறியது: தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் சொத்துக்களை எங்களது பொறுப்பில் கொண்டு வந்து ஆவணப்படுத்துவதனை நோக்கமாக கொண்டு அனைத்து பகுதிகளுக்கும் சென்று வருகிறோம். எல்லா இடங்களிலும் உள்ள காங்கிரஸ் கட்டிடங்களை கட்சியினர் பயன்படுத்தி வருகின்றனர். பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள இடங்களை பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இடங்களை காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளுக்கு முறையாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு நல்ல நிலையில் சென்று கொண்டுள்ளது. ராகுல்காந்தி தலைமையில் மீண்டும் காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வரும். இந்தியா கூட்டணி தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த மக்களவை தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் கூட்டணியாக நின்று வெற்றி பெற்றுள்ளோம். இது கூட்டணிக்கு பெரும் பலம். திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருமா என்பது குறித்து கூட்டணியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார். சில கட்சிகள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் கூட்டணி ஆட்சி என்பது கட்சியின் கொள்கை முடிவு இது குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் கட்சியின் அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும் என்றார். மேலும் கடந்த அதிமுக ஆட்சியில் அனைத்து வளர்ச்சியிலும் தமிழகம் பின் தங்கியிருந்தது. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தற்போது சமூக பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முதல் மாநிலமாக மாறியுள்ளது. இது மத்திய அரசின் அதிகாரபூர்வமான ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாராட்டுக்குரியது என்றார். இந்த ஆய்வு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் செல்வகுமார், முன்னாள் மாவட்டத் தலைவர் ஷேக்நவீத், காந்தி மாளிகை டிரஸ்ட் போர்டு தலைவர் என்.சண்முகம், வர்த்தக அணி செயலர் சண்முகம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
Next Story