பள்ளி மாணவர்களுக்கான காலநிலை மாற்றம் குறித்த பயிற்சியினை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.

X
NAMAKKAL KING 24X7 B |16 Oct 2025 8:37 PM ISTநாமக்கல் மாவட்ட ஆட்சியர் வனத்துறையின் சார்பில் மாவட்ட காலநிலை மாற்றும் இயக்கத்தின் கீழ் நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான காலநிலை மாற்றம் குறித்த பயிற்சியினை தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்டம், நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் வனத்துறையின் சார்பில் மாவட்ட காலநிலை மாற்றும் இயக்கத்தின் கீழ் நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான காலநிலை மாற்றம் குறித்த பயிற்சியினை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, வனத்துறையின் சார்பில் மாவட்ட காலநிலை மாற்றும் இயக்கத்தின் கீழ் “எவ்வாறு உங்கள் பள்ளியை பசுமையாக்குவது” என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான காலநிலை மாற்றம் குறித்த பயிற்சி நடைபெற்று வருகிறது. மனிதன் தன்னுடைய தேவைகளுக்காக காடுகளை அழிப்பது, கால நிலை மாற்றம், விவசாயத்தில் உயிர் கொல்லி பயன்படுத்துவது, செல்போன், கணினி பயன்பாடு அதிகரிப்பு, மக்கள் தொகை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் பசுமை பரப்பு குறைத்து புவி வெப்பமடைதல் அதிகரிக்கிறது. வளர்ச்சியில் சமநிலையில் இருப்பதோடு, நமது சுற்றுச்சூழலையும் நாம் பேணி பாதுகாக்க வேண்டும். அடுத்த தலைமுறைக்கு சுகாதாரமான, பாதுகாப்பான இயற்கையினை நாம் வழங்க வேண்டும். மேலும், நெகிழி பயன்பாட்டினை குறைக்க வேண்டும். சூரிய சக்தியை பயன்படுத்தக்கூடிய சோலார் உபயோகத்தினை அதிகரிக்க வேண்டும். எரிபொருள் பயன்பாட்டினை குறைக்கும் வகையில் மிதிவண்டிகளை பயன்படுத்தலாம். பசுமை பரப்பை அதிகரித்தால் மட்டுமே காலநிலை சீராக அமையும். பூமியை வெப்பமடைவதில் இருந்து பாதுகாக்கும் வகையில் அதிகளவில் மரக்கன்றுகள் நடுதல், மழைநீரை சேமித்தல், நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரித்தல் உள்ளிட்ட செயல்களில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அதிகளவில் மரக்கன்றுகள் நடுவதன் மூலம் வருங்காலத்தில் தூய்மையான குடிநீர் கிடைக்கும். சுகாதாரமான காற்றோட்டம் அமையும். மேலும் தீபாவளி பண்டிகையில் அதிக ஒலியுடன், சுற்றுச்சூழலுக்கு அதிகளவில் மாசு ஏற்படுத்தும் வெடிபொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, பாதுகாப்பாக கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், வானவியல் விரிவாக்க அலுவலர் (பொ) முனைவர் இரா.செல்வகுமார், முதன்மை கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) புருசோத்தமன், பள்ளி தலைமையாசிரியர் பா.சாந்தி, தோட்டக்கலை உதவி இயக்குநர் இரா.யுவசெந்தில்குமார், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மு.திருஞானம் உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
