சடையனேரி கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் நங்கைமொழி பகுதிக்கு வருகை: மலர் தூவி வரவேற்பு!

சடையனேரி கால்வாயில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நங்கை மொழி கால்வாய் பகுதிக்கு வருகை தந்ததை ஒட்டி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் தலைமையிலான பாஜகவினர் மலர் தூவி வரவேற்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு இடங்களில் பெய்து வருகிறது. இந்த நிலையில் தென் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மணிமுத்தாறு, தாமிரவருணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரவருணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஸ்ரீவைகுண்டம் அணை வழியாக தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரம் கணக்கான கன அடி தண்ணீர் கடலுக்கு வீணாக செல்கிறது. இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி கடலுக்கு வீணாக்கு சொல்லும் தண்ணீரை மருதூர் மேல் கால் வழியாக சடையனேரி கால்வாயில் திறந்து விடக் கோரி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் மாவட்டத் தலைவர் சித்ராங்கதன் தலைமையில் சாத்தான்குளத்தில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சாத்தான்குளம் வட்டாட்சியர் ராஜேஸ்வரி, சாத்தான்குளம் டிஎஸ்பி ஆவுடையப்பன் மற்றும் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியதில் சடையனேரி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை அடுத்து பாஜக போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டம் காரணமாக திறக்கப்பட்ட தண்ணீர் செவ்வாய்க்கிழமை சடையனேரி, புத்தன் தருவை பகுதிக்கு பிரிந்து செல்லும் வகையில் உள்ள நங்கை மொழி தடுப்பணை பகுதிக்கு வருகை தந்தது. அப்போது, தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் பாஜகவினர் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். அப்போது அதிகாரிகள், சாத்தான்குளம் உடன்குடி பகுதி குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை கருத்தில் கொண்டு இப்பகுதி குளங்கள் நிரம்பும் வரை சடையனேரி கால்வாயில் தொடர்ந்து தண்ணீர் விட வேண்டுமென வலியுறுத்தினர். இதில் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராஜ், சாத்தான்குளம் ஒன்றிய தலைவர் சரவணன், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். மேலும், சுப்பராயபுரம் தடுப்பணைக்கு வரும் கால்வாயில் தென்பகுதி விவசாய சங்கத்தினர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
Next Story