தொடர் மழை காரணமாக அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் காணொளி காட்சி வாயிலாக அறிவுரை.

X
NAMAKKAL KING 24X7 B |22 Oct 2025 6:08 PM ISTநாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தயார்நிலை பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் நாமக்கல் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதிக மழை பொழியும் பட்சத்தில் அதனால் ஏற்படும் வெள்ள பாதிப்புகளைத் தடுக்கும் வகையிலும், இழப்புகளைக் குறைக்கும் நோக்கத்திலும் சரியாகத் திட்டமிட்டு பேரிடர் முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் கடந்த காலங்களில் பெய்த மழையின் அடிப்படையில் அதிகளவில் பாதிப்பிற்குள்ளாகும் (High Vulnerable) இடங்களாக 2 இடங்கள், மிதமாக பாதிப்பிற்குள்ளாகும் (Medium Vulnerable) இடங்களாக 30 இடங்கள், குறைவாக பாதிப்பிற்குள்ளாகும் (Low Vulnerable) 1 இடம் என மொத்தம் 33 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேற்படி, கனமழையின் காரணமாக பாதிப்பிற்குள்ளாகும் என அடையாளம் காணப்பட்ட இடங்களில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள முதல் பொறுப்பாளர்களாக (First Responders) நாமக்கல் மாவட்டத்தில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிக பாதிப்புக்குள்ளாகும் என கண்டறியப்பட்ட பகுதிகளில் வெளியேற கூடிய வழிகள் மற்றும் நிவாரண இடங்கள் ஆகிய விவரங்களுடன் கூடிய டிஜிட்டல் வரைபடம், கிராம அளவில் முதல் பொறுப்பாளர்களின் பட்டியல், உயர் மின்விளக்குகள், மோட்டார் பம்பு செட்டுகள், டீசல் மின்னாக்கி ஆகியவை தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பேரிடர் காலங்களில் இடிந்து விழும் கட்டிடங்களை அப்புறப்படுத்த பணியாளர்கள் தயார் நிலையில் இருக்கவேண்டும். மேலும், மழை, சூறை காற்றினால் சாலையில் விழும் மரங்களை அப்புறப்படுத்த அறுவை இயந்திரங்கள், ஜே.சி.பி (JCB) வாகனங்கள் ஆகியவை தயார் நிலையில் இருக்க வேண்டும். நிவாரண மையங்களில் தங்க வைக்க ஏதுவாக போதுமான இடவசதி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதி, உணவு, உடை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், மருந்துகள், மாத்திரைகள் மற்றும் அவசர தேவைக்கு அவசர ஊர்தி ஆகியவை தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை உள்ளிட்ட வார்டுகளில் தடையற்ற மின்சாரம் உள்ளதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும். போதுமான அளவு ஆக்சிஜன் உருளைகள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். பாதிப்புக்குள்ளாகும் என எதிர்பார்க்கும் பகுதிகளில் கால்நடை நிவாரண மையங்கள், கால்நடைகளுக்குத் தேவையான ஊசி, மருத்துகள், தீவனங்கள்/தண்ணீர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். உள்ளாட்சி நிர்வாகங்கள் மழை காலங்களில் குடிநீரை குளோரினேசன் செய்து வழங்க வேண்டும். மேலும் உள்ளாட்சி நிர்வாகங்களின் கட்டுப்பாட்டில் உள்ள வாகனங்களில் எச்சரிக்கை தகவல்களை உடனுக்குடன் பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் ஒலிப்பெருக்கி அமைப்புகளை தயாராக வைத்திருக்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறையினர் கிராமப்புற சாலைகளிலும், நெடுஞ்சாலைகளிலும் மழைகாலங்களில் மரங்கள் விழுந்தால் உடனடியாக அகற்றிட வேண்டும். தீயணைப்புத்துறையின் சார்பில் ஆற்றோரங்கள் மற்றும் வெள்ள நீரினால் பாதிக்கப்பட கூடிய இடங்களில் அவசர கால செயல்பாடு குறித்த (Mock drill) ஒத்திகை நடத்த வேண்டும். மின்சாரவாரியம் அலுவலர்கள், பருவமழைக் காலத்தில் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் மின்சார இடையூறுகளை பழுது பார்க்க 24 மணி நேரமும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.மேலும், வடகிழக்கு பருவமழை காலத்தில் தன்னார்வலர்கள் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். பேரிடர் மேலாண்மை குழுக்களில் இடம்பெற்றுள்ள அலுவலர்கள் களஆய்வு மேற்கொள்ள வேண்டும். வடகிழக்கு பருவமழையினால் ஏற்படும் பேரிடர் தொடர்பான தகவல்களை பொதுமக்கள் உடனுக்குடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மூலம் 24 மணிநேரமும் தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்கள் TNSMART என்ற செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து மழை குறித்த பேரிடர் மேலாண்மை எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தொடர்ந்து, இராசிபுரம் நகராட்சி அலுவலகம் மற்றும் இராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தொடர்மழை காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் மருத்துவமனை சுற்றுப்புற பகுதிகளில் மழை நீர்தேங்காத வண்ணம் உடனுக்குடன் அப்புறப்படுத்தி, தூய்மையாக பராமரித்திடவும், நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மரு.ரெ.சுமன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) சு.சுந்தரராஜன் உட்பட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
