புதிய கழிப்பிடம் கட்டித்தர கோரி சி.பி.எம். காத்திருப்பு ஆர்ப்பாட்டம்

X
Komarapalayam King 24x7 |23 Oct 2025 6:42 PM ISTகுமாரபாளையம் 12 வது வார்டு காந்திபுரம் பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கழிப்பிடம் சேதமானதால், புதிய கழிப்பிடம் கட்ட வேண்டும் என்று நகராட்சி அலுவலகம் முன்பு சி.பி.எம். கட்சியினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
குமாரபாளையம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளது. இதில் 12 வது வார்டு காந்திபுரம் பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கழிப்பிடம் தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள், நகராட்சி நிர்வாகத்திடம் புதிய கழிப்பிட கட்டிடம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை மனுக்களை அனுப்பினர். புதிதாக கழிப்பிடத்தை கட்டி தர வேண்டும்.காந்திபுரம் பகுதியில் உள்ள ஓடை புறம்போக்கு பள்ளத்தை சுத்தம் செய்ய வேண்டும் அரசு பள்ளி எதிரில் குப்பைகள் தீ வைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.சாக்கடை வசதி செய்து தர வேண்டும். தினசரி பொதுமக்களிடம் குப்பைகளை பெற வேண்டும். 12 வது வார்டு பகுதியில் நாய்கள் அதிகரிப்பால் குழந்தைகளை கடிக்கு நிலை உள்ளது. எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12வது வார்டு கிளை சார்பில் குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் முன்பாக காத்திருக்கும் போராட்டம் நடந்தது. கட்சி கிளை செயலாளர் சண்முகம் தலைமை வகிக்க, சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நகர தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார் . போராட்டத்தின் கோரிக்கைகளை வலியுறுத்தி கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், மாவட்ட குழு உறுப்பினர் சக்திவேல், குமாரபாளையம் நகர செயலாளர் கந்தசாமி, முன்னாள் நகர செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பேசினர் .நூற்றுக்கும் மேற்பட்டோர் நகராட்சி அலுவலகம் முன்பாக அமர்ந்து கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி ஆணையாளர் ரமேஷ் மற்றும் நகராட்சி தலைவர் விஜய கண்ணன், குமாரபாளையம் காவல் ஆய்வாளர் தவமணி ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போராட்டத்தை ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களுடைய பகுதியில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும், புதிய கழிப்பிடம் கட்டி தர வேண்டும் எனவும் உறுதியாக வலியுறுத்தி பேசினர். இதனை கேட்டறிந்து அதன் பின் அவர்களுக்கு பதில் அளித்த நகராட்சி தலைவர் விஜய் கண்ணன், ஏற்கனவே இருக்கும் அந்த கழிப்பிடத்தை முழுமையாக பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பராமரிப்பு செய்து தருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் எதிர்வரும் காலத்தில் புதிய கழிப்பிடம் கட்டுவதற்கான இடம் அங்கேயே உள்ளதா? என பார்க்கப்பட்டு, உடனடியாக புதிய கழிப்பிடம் கட்டுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும், என அவர்களிடம் உறுதியளித்தனர் . இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Next Story
