ஊர் கூடி சுத்தம் செய்வோம்: கால்வாயை சீரமைத்த பொது மக்கள்

X
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவி நல்லூர், நடுவக்குறிச்சி, புத்தன்தருவை, கொம்மடிக்கோட்டை, படுக்கப்பத்து ஊராட்சி பகுதியில் வைரவம் தருவை குளம், புத்தன்தருவை குளம் அமைந்துள்ளது. இந்த குளமானது கிராமத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், விவசாயத்திற்கும் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது. இந்த குளங்களுக்கு சடையனேரி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதையொட்டி பொத்தகாலன்விளை கிராம மக்கள் மற்றும் சாத்தான்குளம் தென் பகுதி விவசாயிகள் சங்கம் இணைந்து ஊர் கூடி சுத்தம் செய்வோம் என்ற திட்டத்தின் அடிப்படையில் வைரவம் தருவை, புத்தன் தருவை நீர்வழி பாதையான முதலூர் ஊரணியைத் தாண்டி புதூர் பொத்தகாலன்விளை வைரவம் தருவை பகுதி வரை கால்வாயை சுத்தம் செய்யும் பணி நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இப்பணிக்கு நிதியாகபொத்தக்காலன்விளை ஊர் மக்கள் ரூ,50 முதல் 100, 200, 500, 1000 என குறிப்பிட்ட மக்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்தனர். நரையன்குடியிருப்பு. போலையர்புரம் விவசாய சங்க விவசாயிகளும் தங்களுடைய பங்களிப்பை அளித்தனர். பொத்தகாலன்விளை பகுதியில் கால்வாயை சுத்தம் செய்ய தொடங்குவதற்கு முன்பு விவசாயிகள் கால்வாயை பாதுகாக்கும் வகையில் மாமிச கழிவுகள், மருத்துவ கழிவுகள் மற்றும் குப்பைகளை கால்வாயில் கொட்ட மாட்டோம். கொட்டப்படுவதை தடுப்போம் என அனைவரும் உறுதிமொழி எடுத்தனர். பொத்தகாலன்விளை பகுதியில் உள்ள கால்வாயில் இருந்து முதலூர் புதூர், வைரவம் தருவை வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் பொங்கலைன் இயந்திரம் மூலம் மணல்மேடுகள் மற்றும் குப்பைகளை அகற்றி கால்வாயை சீரமைத்தனர். இப்பணியில் திட்ட ஒருங்கிணைப்பாளரும், சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க தலைவர் லூர்து மணி, சங்க துணை தலைவர் ரவிச்சந்திரன், செயலர் பெரியசாமி, தமிழக விவசாய சங்க கூட்டமைப்பின் செயலர் அன்ன கணேசன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க துணைத் தலைவர் சகாய சீலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

