ஆதவ் அர்ஜுனா மனு குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி அமர்வுக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு

ஆதவ் அர்ஜுனா மனு குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி அமர்வுக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு
X
தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி தவெக தோ்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த மனுவை குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிக்கு அனுப்பி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
கரூர் துயர சம்பவத்தில் 41 பேர் பலியான நிலையில் தவெக நிர்வாகிகளை காவல்துறை கைது செய்து வந்தது. இந்நிலையில் தவெக தோ்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், அரசின் அடக்குமுறைக்கு எதிராக இலங்கை, நேபாளம் நாடுகளைப் போல ‘Gen Z’ புரட்சி ஏற்படும் என தமிழக அரசை எச்சரிக்கும் வகையில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக, ஆதவ் அர்ஜுனா மீது கலவரத்தை தூண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தன் மீது பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்யகோரி ஆதவ் அர்ஜுனா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், 34 நிமிடங்களில் சமூக வலைதள பதிவுகளை நீக்கி விட்ட நிலையில், அரசியல் உள் நோக்கத்துடன் தனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தன்னுடைய எக்ஸ் பதிவு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கில் பதிவிடப்படவில்லை. காவல்துறை தன் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்ற வழக்கான இந்த மனுவை, சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு மாற்றிய நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 5-ம் தேதிக்கு மனுவை பட்டியலிடவும் உத்தரவிட்டனர். அதன்படி, இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் நவம்பர் 5-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
Next Story