மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு – பாதுகாப்பு மற்றும் வசதிகள் சிறப்பாக ஏற்பாடு.
கோவை அருகே மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. முருகனின் ஏழாம் படை வீடாகக் கருதப்படும் இக்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பெருந்திரளான பக்தர்கள் வருகையால் ஏற்படும் நெரிசலை தவிர்க்க அடிவாரத்திலிருந்து மலைமேல் செல்ல வாகனங்கள் தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டன. சட்டக் கல்லூரி அருகே வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டு, கோவில் பேருந்து மற்றும் படிக்கட்டு வழியாக பக்தர்கள் மலைமேல் சென்றனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டனர். மேலும் குடிநீர், மருத்துவம், பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Next Story