பெண் அதிகாரிக்கு அவதூறு: விசிக தலைவருக்கு வழக்கு

X
கன்னியாகுமரி மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியாக பணியாற்றி வருகிறார் பாரதி. சமீபத்தில், நாகர்கோவில் அருகே உள்ள பிரபல பேக்கரி ஒன்றில் அதிகாரியின் உத்தரவின் பேரில் ஆய்வு செய்து, அனுமதியின்றி இயங்கி வருவதாக கூறி மின் இணைப்பு துண்டிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி பாரதியின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னியாகுமரி மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு ஆதரவாக நேற்று நாகர்கோவில் வாட்டர் டேங்க் சாலையில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன்பு திடீரென ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் மற்றும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (ரெட் ஸ்டார்) மாவட்ட செயலாளர் மணவை கண்ணன் ஆகியோர் மிகவும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் தரக்குறைவான வார்த்தைகளால் பெண் அதிகாரி பாரதியை விமர்சித்து பேசியுள்ளனர். பெண் அதிகாரியை “நாய்” எனவும் “சங்கி” எனவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் பேசியதாக, அதிகாரி பாரதி வடசேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வடசேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு, பெண் அதிகாரி பாரதியின் புகாரின் பேரில் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் அல்காலித், மணவை கண்ணன் மற்றும் பேக்கரி உரிமையாளர் முகமது இஸ்மாயில் ஆகியோர்மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story

