சேலத்தில் கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

X
சேலம் சின்ன கொல்லப்பட்டி பெரியார் நகரை சேர்ந்தவர் சேட்டு (வயது 48), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சேட்டுவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு அதற்காக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மனவேதனை அடைந்து காணப்பட்ட சேட்டு நேற்று காலை வீட்டில் உள்ள மின்விசிறி கொக்கியில் தூக்கில் தொங்கினார். இதனிடையே வெளியே சென்றிருந்த மகள் வீட்டுக்கு வந்தார். அப்போது தந்தையின் அறையின் கதவை வெகுநேரமாக தட்டியும் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது சேட்டு மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அழைத்து சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டது தெரியவந்தது. கட்டிட தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

