சேலம் கொண்டலாம்பட்டியில் தறித்தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு

X
சேலம் கொண்டலாம்பட்டி பட்டப்பன் நகரை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (வயது 30), தறித்தொழிலாளி. இவருக்கு மனைவி, மகன் உள்ளனர். சவுந்தரராஜன் கடந்த 19-ந் தேதி குடும்பத்துடன் தர்மபுரியில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றார். அப்போது அவரது மகனுக்கு திடீரென உடல்நலம் குறைவு ஏற்பட்டதால் அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். இதையடுத்து மகனுக்கு உடல்நலம் தேறிய பிறகு சவுந்தரராஜன் நேற்று காலை சேலத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். இதில் பீரோவில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 2½ பவுன் நகை மற்றும் ரூ.29 ஆயிரம் திருட்டு போனது. இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story

