நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் நிகழ்ச்சி.

X
Namakkal King 24x7 |2 Nov 2025 9:12 PM ISTநாமங்கள்...ஆயிரம் என்ற தலைப்பில் வைஷ்ணவத் திலகம் கும்பகோணம் மருத்துவர் உ.வே.வேங்கடேஷ் விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் மண்டபத்தில் ஆன்மிக வேள்வி நிகழ்ச்சியில் மோகனூா் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயண மண்டலி சாா்பில் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயண பக்தி சொற்பொழிவு நடைபெற்றது.நாமக்கல் தமிழ்ச் சங்கம், ஆன்மிக வேள்வி தலைவா் இரா.குழந்தைவேல் அனைவரையும் வரவேற்றார். ஆஞ்சநேயர் கோவில் அறங்காவலா் குழுத் தலைவா் கே.நல்லுசாமி தலைமை வகித்தார். கிரீன்பாா்க் கல்வி நிறுவனங்களின் இயக்குநா் ஆன்மிக பைங்கொழுந்து டாக்டர் எஸ்.குருவாயூரப்பன், ஆஞ்சநேயர் கோயில் உதவி ஆணையா் இரா.இளையராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனர்.‘நாமங்கள்...ஆயிரம்’ என்ற தலைப்பில் வைஷ்ணவத் திலகம் கும்பகோணம் மருத்துவர் உ.வே.வேங்கடேஷ் விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார். அப்பொழுது பேசியதாவது, நம்பிக்கையோடு பாராயணம் செய்பவர்களுக்கு கை மேல் பலன் தரும் அற்புத மந்திரங்கள் கொண்டது விஷ்ணு சஹஸ்ரநாமம். மஹா பெரியவா ஸ்வாமிகள் இதன் பெருமைகளை பலமுறை எடுத்துக் கூறியுள்ளார்கள். ஒரு முறை மஹா பெரியவருக்கு கடுமையான காய்ச்சல் வந்த போது, மருந்து மாத்திரை எடுத்துக்கொள்ளாமல் விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயாணம் செய்து, அதன் மூலமே காய்ச்சலை சரி செய்து கொண்டார், இத்தனை அற்புதங்கள் செய்யும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை தினமும் காதால் கேட்டாலே மிகவும் நன்மை தரும். சத்தமாக பாராயாணம் செய்தால் எண்ணற்ற பலன்களை அளிக்கும் என்றார். இந்த நிகழ்ச்சியை கலைமாமணி பேராசிரியர் அரசு பரமேசுவரன் தொகுத்து வழங்கினார்.பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story
