டி.எஸ்.பி. அலுவலகம் குமாரபாளையத்தில் அமைக்ககோரி அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

டி.எஸ்.பி. அலுவலகம் குமாரபாளையத்தில் அமைக்கக்கோரி அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அ.தி.மு.க. ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்திரவின் பேரில், முன்னாள் அமைச்சர் தங்கமணி முயற்சியினால் குமாரபாளையம் தாலுக்கா துவங்கப்பட்டது. இதன் அலுவலகம் குமாரபாளையம் நகரில் அமைய, முன்னாள் நகராட்சி தலைவர் சேகர் தலைமையில் அனைத்து கட்சியினர் ஓரணியில் திரண்டு, வலியுறுத்தியதன் பேரில், குமாரபாளையம் தாலுக்கா அலுவலகம், நகராட்சிக்கு சொந்தமான அண்ணா திருமண மண்டபத்தில் 2016, பிப். 27 முதல் செயல்பட துவங்கியது. இதற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட துவங்கியது. குமாரபாளையம் பொதுமக்கள் நீதிமன்ற பணிகளுக்கு திருச்செங்கோடு நீதிமன்றம் சென்று வந்த நிலையில், குமாரபாளையத்தில் நீதிமன்றம் கொண்டுவரப்பட்டது. தற்போது டி.எஸ்.பி. அலுவலகம் வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததின் பேரில், அதற்கான ஒப்புதல் கிடைக்கப்பெற்றது. ஆனால், டி.எஸ்.பி. அலுவலகம் பள்ளிபாளையம் பகுதியில் அமையவிருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு குமாரபாளையம் பகுதி பொதுமக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இது குறித்து அனைத்து கட்சியினர், நாமக்கல் கலெக்டர் துர்கா, கோவை மேற்கு மண்டல காவல்துறை ஐ.ஜி.,செந்தில்குமார் , நாமக்கல் மாவட்ட எஸ்.பி. விமலா, ஈரோடு எம்.பி. பிரகாஷ், எம்.எல்.ஏ. தங்கமணி, தி.மு.க. மாவட்ட செயலர் மூர்த்தி, நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் உள்ளிட்ட பலரிடம் மனு கொடுத்து, டி.எஸ்.பி. அலுவலகம் குமாரபாளையத்தில் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும், என கேட்டுக்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக நேற்று பள்ளிபாளையம் பிரிவு சாலையில் உரிமை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் சேகர், மக்கள் நீதி மய்யம் மண்டல செயலர் காமராஜ், மாவட்ட மகளிரணி செயலர் சித்ரா, தே.மு.தி.க. மாவட்ட பொருளர் மகாலிங்கம், நகர செயலர் நாராயணசாமி, காங்கிரஸ் நகர செயலர் ஜானகிராமன், அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலர் நாகராஜன், சி.பி.ஐ. நகர செயலர் கணேஷ்குமார், சி.பி.எம். ஆறுமுகம், முருகேசன், பா.ம.க. நிர்வாகி சவுந்திரராஜன், தி.க. நகர செயலர் சரவணன், பெரியார் திராவிட கழகம் நிர்வாகி சுவாமிநாதன், விடுதலை சிறுத்தைகள் நகர செயலர் பிரபு, விடியல் ஆரம்பம் பிரகாஷ் ,பஞ்சாலை சண்முகம் பன்னீர்செல்வம் உள்பட பலர் பங்கேற்று நகராட்சி தலைவரிடம் மனு வழங்கினர்.
Next Story