அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு உடற்கல்வி புத்தகம் மற்றும் உபகரணங்கள் அரசு வழங்க வேண்டும் !-உடற்கல்வி ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்.

X
Namakkal King 24x7 |9 Nov 2025 8:33 PM ISTஉடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில் மாணவர்கள் விளையாடுவதே இல்லை , மாணவர்கள் விளையாடாததால் பல்வேறு கெட்ட பழக்கத்திற்கு ஆளாகின்றனர்.சீனாவில் 8 வயதிலேயே மாணவர்களுக்கு விளையாட்டு சொல்லி கொடுக்கப்பட்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்பபடுகின்றனர்.!
தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் நாமக்கல்- மோகனூர் சாலை ஜெய்விஹாஸ் பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஏ.சசிகுமார் வரவேற்றார். மாநில தலைவர் டி.தேவிசெல்வம் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் வெ.பெரியதுரை, மாநில பொருளாளர் கே.தமிழ்செல்வன், மாநில செயல் தலைவர் ஆர்.சீனிவாசன், மாநில தலைமையிடச் செயலாளர் ராஜா.சுரேஷ், மாவட்ட தலைவர் மா.பெரியசாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.இதில், பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் மற்ற ஆசிரியர்கள், கல்வித்துறை பணியாளர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 8 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதுபோல், உடற்கல்வி இயக்குநர் நிலை–1 பதவிக்கும் 8 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் விலையில்லா உடற்கல்வி புத்தகம் மற்றும் உபகரணங்கள் அரசு வழங்கிட வேண்டும். விளையாட்டு போட்டிக்கு செல்லும் மாணவ, மாணவிகளுக்கு போக்குவரத்துப்படி, உணவுப்படி தனியாக வழங்க வேண்டும்.புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். சேலம் மாவட்டத்தில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர் முத்துசாமியை தாக்கிய மாணவர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடற்கல்வி ஆசிரியர்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் 50 சதவீதம், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 50 சதவீதம் என்ற அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்திற்கு பின் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெரியதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில்.... தமிழ்நாடு அரசு உடற்கல்விக்கான பாடபுத்தகங்களை துணை முதலமைச்சர் வெளியிட்டார் அந்த புத்தகங்களை இலவசமாக அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் மேலும் தமிழகத்தில் 37 ஆயிரம் அரசு பள்ளிகளில் 6520 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடம் மட்டுமே உள்ளது, 31 ஆயிரம் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்களே இல்லை, அதேப்போல உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 2 ஆயிரம் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடமில்லை எனவே தமிழக முதலமைச்சர் அவர்கள் நடப்பு கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளுக்கும் உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். தமிழகத்தில் 3 ஆண்டுகளாக உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட வில்லை என்றும் 1998 ல் நியமனம் பெற்ற உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 22 ஆயிரம் தொடக்கப் பள்ளியில் ஒரு உடற்கல்வி ஆசிரியர்கள் கூட கிடையாது மேலும் 9 ஆயிரம் நடுநிலைப்பள்ளிகளில் 40 உடற்கல்வி ஆசிரியர்கள் மட்டுமே இருக்கின்றனர். உயர்நிலைப்பள்ளி,மேல்நிலைப் பள்ளியில் 7 ஆயிரம் பள்ளிகளில் 6500 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளில் மாணவர்கள் விளையாடுவதே இல்லை என்றும் மாணவர்கள் விளையாடாததால் பல்வேறு கெட்ட பழக்கத்திற்கு ஆளாகின்றனர். சீனாவில் 8 வயதிலேயே மாணவர்களுக்கு விளையாட்டு சொல்லி கொடுக்கப்பட்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு அனுப்ப படுகின்றனர் இவ்வாறு அவர் கூறினார்.இந்த கூட்டத்தில், மாவட்ட பொருளாளர் பி.அப்பாதுரை மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Next Story
