குழந்தைகள் நாள் சிறப்பு நெகிழி தவிர்க்கும் விழிப்புணர்வு பேரணி

X
Komarapalayam King 24x7 |15 Nov 2025 7:33 PM ISTகுமாரபாளையத்தில் நெகிழி விழிப்புணர்வு பேரணி தமிழ் சிந்தனை பேரவை சார்பில் நடைபெற்றது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் முனிராஜா பதின்ம மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியர் குழந்தைகள் நாளை சிறப்பிக்கும் விதமாக நெகிழி தவிர்க்கும் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். இப்பேரணிக்கு தாளாளர் ஜெயபிரகாஷ் அவர்கள் தலைமை தாங்க, இயக்குனர்கள் ஸ்ரீ நித்யா,கரண் ராஜா முன்னிலை வகிக்க பள்ளி முதல்வர் திருமதி அர்ச்சனா பன்னீர் அவர்கள் வரவேற்புரை செய்தார். நிகழ்விற்கு குமாரபாளையம் வட்டாட்சியர் பிரகாஷ், காவல் உதவி ஆய்வாளர் நடராஜன், தமிழ் சிந்தனைப் பேரவைத் தலைவர் இரமேஷ் குமார் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவ மாணவியருடன் நடந்து சிறப்பித்தனர். நெகிழியை பயன்படுத்த மாட்டோம் இயற்கையை காப்போம் என்று ஒலி எழுப்பியவாறு மாணவ மாணவியர் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து காவல் நிலையம், பேருந்து நிலையம், பள்ளிபாளையம் பிரிவு சாலை, ஆனங்கூர் பிரிவு சாலை, ராஜம் திரையரங்கம் வழியாக தேசிய நெடுஞ்சாலை வரை பேரணி நடைபெற்றது. மேலும் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதமாக மாணவ மாணவியர் பதாகைகளை ஏந்திக் கொண்டும் மாறு வேடங்கள் தரித்தும் பொதுமக்கள் கவனத்தை ஈர்த்தனர். தமிழ் சிந்தனைப் பேரவை தலைவர் இரமேஷ் குமார் அவர்கள் குழந்தைகள் நாள் மற்றும் ஜவர்கலால் நேரு பிறந்தநாள் பற்றி விழிப்புணர்வு சொற்பொழிவு ஆற்றினார். ஆசிரியர்கள் திருமதி ராஜேஸ்வரி, திரு சகாயபாரத் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். நெகிழியை தவிர்ப்போம் இயற்கையை காப்போம் என்று அனைவரும் உளமாற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பேரணியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் குழந்தைகள் நாள் விழா கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு காவல் உதவி ஆய்வாளர் நடராஜன் மற்றும் தமிழ் சிந்தனைப் பேரவைத் தலைவர் இரமேஷ் குமார் பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர். தமிழ் ஆசிரியர் திருமதி அனுராதா அவர்கள் நன்றி கூறினார்.
Next Story
