நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் மண்டல மற்றும் நாமக்கல் மண்டலத்திற்குட்பட்ட ஏழு வட்டார நிர்வாகிகள் மற்றும் மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டம் நாமக்கல் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.
நாமக்கல் மண்டலத்தில் உச்சபட்ச முட்டை விலையை எட்டுவதில் முக்கிய பங்காற்றிய மண்டல தலைவர் கே. சிங்கராஜ் மற்றும் மண்டல துணைத்தலைவர் வி. பி. சண்முகம் ஆகியோர், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகளும் தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்க நிர்வாகிகளும் இணைந்து கௌரவித்தனர்.கூட்டத்துக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல பொருளாளர் சுந்தரராஜ் தலைமை வகித்தார். பல்லடம், ஈரோடு, பரமத்தி, மோகனூர், நாமக்கல், புதன் சந்தை, ராசிபுரம் உள்ளிட்ட வட்டாரக் குழு நிர்வாகிகளும், மத்திய குழுவில் நாமக்கல் மண்டலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நிர்வாகிகளும், நாமக்கல் மண்டல முட்டை விலை நிர்ணய ஆலோசனைக்குழு உறுப்பினர்களும், முட்டை வியாபாரிகள் சங்க உறுப்பினர்களும் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கம் சார்பில் மண்டல தலைவர் கே. சிங்கராஜ் மற்றும் மண்டல துணைத்தலைவர் வி. பி. சண்முகம் ஆகியோருக்கு பொன்னாடை மற்றும் மலர்மாலை அணிவித்தும், நினைவு பரிசுகள் வழங்கியும் கௌரவம் செய்யப்பட்டது. கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள் அனைவரும், முட்டை விலை ரூ.6 எனும் உச்சத்தை எட்டியதற்காக மண்டல தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும் எந்த சூழ்நிலையிலும் மைனஸ் இல்லா விலையை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என பண்ணையாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.மண்டல துணைத்தலைவர் தனது உரையில், சரியான முட்டை விலை நிர்ணயத்தில் மண்டல தலைவருக்கு அனைத்து வட்டாரக் குழு நிர்வாகிகளும், கோழிப்பண்ணையாளர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.பாராட்டுகளை ஏற்றுக்கொண்ட மண்டல தலைவர் திரு. கே. சிங்கராஜ் அவர்கள், நாமக்கல் மண்டலத்தில் மட்டும் அல்லாது இந்தியா முழுவதும் உச்ச விலை எட்டியதற்கான முக்கிய காரணம், நாமக்கலிலிருந்து தொடர்ந்து நடைபெறும் முட்டை ஏற்றுமதி என்றும் தெரிவித்தார். முட்டைகள் தேங்காமல், மைனஸ் இல்லா விலை தொடர்ந்து நிலைக்க, பண்ணையாளர்கள் தொடர்ந்து முட்டைகளை விற்பனைக்கு விட வேண்டும் என கேட்டுக் கொண்டார். ரூ.6 என்பது ஒரு மைல்கல்லே தவிர, குளிர்காலம் நிறைவடையும் வரை முட்டை விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.மேலும், 35 வருடங்களுக்கும் மேலாக மூன்று மண்டலத் தலைவர்களின் மேற்பார்வையில் சிறப்பாக பணியாற்றி வரும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் உதவி பொது மேலாளர் திரு. வி. எஸ். பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு, பண்ணையாளர்கள் சார்பில் பொன்னாடை அணிவித்து சிறப்பு கௌரவம் அளிக்கப்பட்டது.இவ்விழாவின் அனைத்து ஏற்பாடுகளும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல பொருளாளர் சுந்தரராஜ் அவர்களின் மேற்பார்வையில் சிறப்பாக நடைபெற்றன.
Next Story