திருவண்ணாமலை மாநகரமே விழாக்கோலம் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்.
Arani King 24x7 |24 Nov 2025 10:58 PM ISTதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி காலை கொடியேற்றப்பட்டது. 3ம் பிரகாரத்தில் 63 அடி உயர தங்ககொடிமரத்தில் வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கொடியேற்றினர்
ஆரணி,24 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை துவங்கியது. இதில் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தி முழக்கத்துடன் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து முதல்நாள் உற்சவத்தில் பஞ்சமூர்த்திகள் கண்ணாடி விமானங்களில் பவனிவந்தனர். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் நினைத்தாலே முக்திதரும் திருத்தலமாகவும் அமைந்திருக்கிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் இங்கு நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். பிரமாவுக்கும் திருமாலுக்கும் அடிமுடிகாணாத ஜோதி பிழம்பாக சிவபெருமான் எழுந்தருளியதை கொண்டாடும் வகையில் கார்த்திகை மாதம் கிருத்திகை தினத்தன்று அண்ணாமலையார் மலை மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா அண்ணாமலையார் கோவிலில் நேற்று காலை கொடியேற்றத்தடன் கோலாகலமாக தொடங்கியது. அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது. காலை 6.45 மணியளவில் அண்ணாமலையார் கோவில் 3ம் பிரகாரத்தில் சுவாமி சன்னதி எதிரில் அமைந்துள்ள 63 அடி உயர தங்ககொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. அதையொட்டி பஞ்சமூர்த்திகளான விநாயகர் சுப்பிரமணியர் அண்ணாமலையார் சமேத பிரியாவிடை உண்ணாமலையம்மன் சண்டிகேஸ்வரர் ஆகியோர் அலங்கார ரூபத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க தங்க கொடிமரத்தில் கொடியேற்றினர். அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா உண்ணாமலையம்மனுக்கு அரோகரா என பக்தி முழக்கத்துடன் தரிசனம் செய்தனர். தொடர்ந்து கொடிமரத்துக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. இந்த விழாவில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, ஆட்சியர் க.தர்ப்பகராஜ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகர், கோட்டாட்சியர் எஸ்.ராஜ்குமார், வட்டாட்சியர் சு.மோகனமராமன், கோவில் இணை ஆணையர் பரணிதரன் உள்பட அரசு துறை சார்ந்த அலுவலர்கள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். அதேபோல் தீபத்திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். தீபத்திருவிழாவின் முதல்நாளான திங்கள் கிழமை காலை விநாயகர் வள்ளிதெய்வாணை சமேத சுப்பிரமணியர் அண்ணாமலையார் சமேத பிரியாவிடை உண்ணாமலையம்மன் சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் திட்டிவாசல் வழியாக வெளியேவந்து 16 கால் மண்டபத்தில் கண்ணாடி விமானங்களில் எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகளுக்கு பின் நாதஸ்வரம் மேளதாளம் சிவவாத்தியங்கள் முழங்க சுவாமி புறப்பாடு தொடங்கியது. மாடவீதிகளில் திரண்டிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். அதனைத்தொடர்ந்து உற்சவத்தில் விநாயகர் மூஷிக வாகனத்திலும் வள்ளிதெய்வாணை சமேத சுப்பிரமணியர் மயில் வாகனத்திலும் அண்ணாமலையார் சமேத பிரியாவிடை அதிகார நந்தி வாகனத்திலும் உண்ணாமலையம்மன் ஹம்ச நந்திவாகனத்திலும் பவனிவந்து அருள்பாலித்தனர். அப்போது மாடவீதியில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தரிசனம் செய்தனர்.
Next Story




