வெள்ளகோவில் அருகே செயல்படாத பாறைக்குழியில் சாயக்கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை கொட்டி சுற்றுச்சூழல் பாதிப்பு - கால்நடைகளுக்கு குடிநீர் இல்லாமல் தவிப்பு
Kangeyam King 24x7 |3 Dec 2025 11:43 AM ISTகாங்கேயம் வெள்ளகோவில் அருகே உள்ள வள்ளியரச்சல் ஊராட்சிக்கு உட்பட்ட நல்லூர் பாளையத்தில் செயல்பாட்டில் இல்லாத பாறைக்குழியில் சாயக்கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகள், மிகவும் விஷத்தன்மை கொண்ட கெமிக்கல்கள் ஆகியவற்றை கொட்டி குடிநீர் மற்றும் சுற்றுசூழல் பாதிப்பு. நடவடிக்கை எடுக்க கோரிக்கை
காங்கேயம் அடுத்துள்ள வெள்ளகோவில் வள்ளியரச்சல் ஊராட்சிக்கு உட்பட்ட நல்லூர் பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான பாறைக்குழி ஒன்று உள்ளது. இதில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் இல்லாத சுமார் 40 அடி ஆழம் கொண்ட இந்த பாறைக்குழியில் தற்போது 10 அடி ஆழத்திற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த பாறைகுழியை மூடுவதற்காக இதன் உரிமையாளர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் குப்பைகள், பல்வேறு தொழிற்சாலை கழிவுகள்,பஞ்சு மில்லின் கழிவுகளை கொட்டி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தினார். இதனால் ஊர் பொதுமக்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து கடந்த 2022ம் ஆண்டு பாறைக்குழியில் குப்பை கொட்டக்கூடாது என தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த சில வாரங்களாக நள்ளிரவு நேரங்களில் இதே பாறைக்குழியில் சாயக்கழிவுகள்,பிளாஸ்டிக் குப்பைகள், மிகவும் விஷத்தன்மை கொண்ட கெமிக்கல்கள் ஆகியவற்றை கொட்டி வருவதாகவும் இதனால் நிலத்தடி நீர் மோசமடைந்து துர்நாற்றம் வீசிவருகிறது என்கின்றனர். மேலும் ஆடு,மாடு போன்ற கால்நடைகளுக்கு கொடுக்கக்கூட குடிநீர் இல்லாமல் அருகே உள்ள கிராமத்தில் இருந்து கொண்டு வர வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது என்கின்றனர். நிலம்,நீர்.காற்று மாசு அடைந்து பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடமும், கனிமவளதுறையிடமும், வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் மற்றும் வருவாய் துறை ஆகியோரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர். மேலும் ஓரிரு நாட்களில் உரிய நடவடிக்கை எடுத்து இந்த பாறைக்குழியில் சாயக்கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டாமல் இருக்க உத்திராவிடவேண்டும் இல்லையேல் ஊர் பொதுமக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவதாக பொதுமக்கள் எச்சரிக்கின்றனர். மேலும் பாறை குழியில் கொட்டப்பட்ட சாயக்கழிவுகள் மற்றும் குப்பிகளை அப்புறப்படுத்தி தேங்கியுள்ள நீரையும் வெளியேற்ற வேண்டும் என்கின்றனர். பாறைக்குழி உரிமையாளர்கள் இங்கு யாரும் குப்பை கொட்டக்கூடாது என பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர். ஆனால் இரவு நேரங்களில் பணியாட்களை அமர்த்தி இங்கு குப்பை கழிவுகள், மற்றும் சாயக்கழிவுகளை கொட்டுவதை கண்காணித்து வருகின்றனர். மேலும் லாரிகள் வந்து சென்ற டயர் தடங்கலும் உள்ளது. தமிழக அரசுக்கும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திற்கு சரியான திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை கையாள வலியுறுத்து திருப்பூர் மாவட்டம் முழுவதும் சுற்றுசூழல் பாதுகாப்பு குழு சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில் தற்போது நகர பகுதிகளை விட்டுவிட்டு கிராம பகுதிகளில் சாயக் கழிவுகளை கொட்ட துவங்கியுள்ளனர். இதனால் கிராம பகுதிகளில் பல்வேறு நோய்த் தொற்றுக்கள் உருவாக வாய்ப்புள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
Next Story



