பட்டப் பகலில் வீடு புகுந்து நகை கொள்ளை

சங்ககிரி அருகே அரசு அதிகாரி வீட்டில் பட்டப் பகலில் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கோட்டவருதம்பட்டி ஊராட்சி வளையசெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அரசு போக்குவரத்து கழக ஓய்வு அதிகாரி ராஜாமணி(65). இவரது மனைவி புஷ்பவள்ளி (56). இவர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ராஜாமணி, புஷ்பவள்ளி இருவரும் தனியாக வசித்து வரும் நிலையில் இன்று காலை ராஜாமணி புஷ்பவள்ளியை பள்ளிக்கு அழைத்துச் சென்று விட்டார். மீண்டும் மதியம் 2 மணிக்கு ராஜாமணி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே ராஜாமணி தனது மனைவி மற்றும் மகன்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனையடுத்து அனைவரும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் வைத்திருந்த 6 பவுன் தங்க நகைகளை காணவில்லை. இது குறித்து சங்ககிரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைத்து தடங்களை சேகரித்து சென்றனர். சங்ககிரி அருகே அரசு போக்குவரத்து கழக ஒய்வு பெற்ற அதிகாரியின் வீட்டில் பட்டப் பகலில் புகுந்து 6 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story