அம்மாப்பேட்டை அருகே பள்ளம் தோண்டும் போது கிடைத்த ஐம்பொன் அம்மன் சிலை

X
Thanjavur King 24x7 |8 Dec 2025 5:38 PM ISTபழமையான உலோக அம்மன் சிலை பாபநாசம் வட்டாட்சியர் பழனிவேலுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
தஞ்சாவூர், டிச.8- தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே அம்மன் ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே கீழகோவில்பத்து கிராமத்தில் உள்ள பூலோகநாதர் கோயில் பகுதியில் ஒரு அடி உயரமுள்ள அம்மன் ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை அருகே கீழகோவில்பத்து கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான பூலோகநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பூலோகநாதர், பூலோகநாயகி, விநாயகர், முருகன், தட்சிணாமூர்த்தி, மகாலட்சுமி, நவக்கிரகங்கள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு தனி சன்னதி உள்ளது. பழமை வாய்ந்த இக்கோயிலில் கடந்தாண்டு திருப்பணிகள் நடைபெற்று சில மாதங்களுக்கு முன் குடமுழுக்கு நடைபெற்றது. இந்நிலையில் அந்த கோயில் வளாகத்தின் வெளிப்புற பிரகாரத்தில் வாழை கன்றுகள் நடவு செய்யவும் மற்றும் தோட்டம் அமைக்க நேற்று முன்தினம் இரவு மூன்று அடியில் குழி தோண்டப்பட்டது. கோயில் பணியாளர்கள் குழி தோண்டும் போது, பூமிக்கடியில் சிலை இருப்பது கண்டறிந்து சிலையை பத்திரமாக வெளியே எடுத்தனர். இதுகுறித்து தகவல் அம்மாபேட்டை காவல் நிலையத்துக்கும், பாபநாசம் வட்டாட்சியருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் மற்றும் வட்டாட்சியர் சிலையை ஆய்வு செய்ததில், பழமையான உலோக அம்மன் சிலை என்பது கண்டறியப்பட்டது. பின்பு அந்த சிலையை பாபநாசம் வட்டாட்சியர் பழனிவேலுவிடம் ஒப்படைக்கப்பட்டது
Next Story
