குளித்தலை டிஎஸ்பி அலுவலகத்திற்கு வருடாந்திர ஆய்வு மேற்கொண்ட மாவட்ட எஸ்பி

விபத்துக்கள் அதிகமாக நடக்கும் இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை
கரூர் மாவட்டம் குளித்தலை டிஎஸ்பி அலுவலகத்திற்கு கரூர் மாவட்ட எஸ்பி ஜோஷ் தங்கையா இன்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். குளித்தலை உட்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள குளித்தலை, நங்கவரம், தோகைமலை, லாலாபேட்டை, மாயனூர், சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி ஆகிய காவல் நிலையங்களில் முக்கிய வழக்கு கோப்புகளையும், அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ஆவணங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் குறித்த கண்காணிப்பு பணிகள், குற்ற பதிவேடுகள், நிலுவையில் உள்ள வழக்கு கோப்புகளை பார்வையிட்டார். மேலும் உட்கோட்ட காவல் அலுவலக போலீசாருக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அறிவுரைகளை வழங்கினார். தொடர்ந்து விபத்து அதிகமாக நடைபெறும் குளித்தலை தேசிய நெடுஞ்சாலையில் நேரில் சென்று பார்வையிட்டார். விபத்துக்கள் நடக்காமல் இருக்க எந்தவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பன பற்றி டிஎஸ்பி செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போக்குவரத்து போலீசாரிடம் கேட்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
Next Story