வெள்ளகோவில் அருகே பெண்ணை கல்லால் அடித்து தீ வைத்து எரித்து கொலை செய்த ஓய்வு பெற்ற காவலர் கைது

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வெள்ளகோவில் அடுத்துள்ள வட்டமலைகரை அணை ஓடைப் பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் பிரேதம் கிடந்துள்ளது. இதுகுறித்து விசாரணை தொடங்கிய வெள்ளகோவில் காவல்துறையினர் முன்னாள் காவலரை கைது செய்து விசாரணை செய்துவருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உத்தமபாளையம் வட்டமலை அணை பகுதியில் பெண் ஒருவர் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். அப்போது அங்கு கால்நடைகளை மேய்க்க சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இதுகுறித்து வெள்ளகோவில் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணையை தொடங்கினர். பின்னர், அங்கு கருகிய நிலையில் பிணமாக கிடந்த பெண்ணின் உடலை பார்வையிட்டனர். அப்போது அந்தப் பெண்ணுக்கு சுமார் 40 வயது இருக்கும் என தெரியவந்தது. அத்துடன், அந்தப் பெண்ணின் கை, கால்களில் கல்லால் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்தன. மேலும் முகமும் கல்லால் சிதைக்கப்பட்டு இருந்தது. இதேபோல் உடல் அடையாளம் காண முடியாத அளவிற்கு எரிக்கப்பட்டு கருகிய நிலையில் இருந்தது. இறந்தப் பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. மேலும் அந்தப் பெண்ணை கல்லால் தாக்கி கொலை செய்ததோடு, உடலை எரித்ததும் தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கைரேகை நிபுணர்கள் தடயங்கள், கைரேகைகளை பதிவு செய்து சேகரித்து சென்றனர். இதையடுத்து இறந்து கிடந்த பெண்ணின் உடலை கைப் பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப் பெண்ணை கல்லால் தாக்கி கொன்றதோடு உடலை எரித்தவர் யார் என்பது பற்றியும், முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டரா? அல்லது நகை, பணத்துக்காக கொலை செய்யப்பட்டரா? என்பது குறித்தும் தீவிரமாக விசாரணையில் தனிப்படை அமைத்து தேடிவந்தனர். மேலும் கொலையான இடத்தில் மது பாட்டில்கள் கிடந்துள்ளது. அந்த பாட்டில்களின் பார்கோடுகள் வைத்து எங்கு விற்பனை செய்யப்பட்டது அதை யார் வாங்கினார்கள் என விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. மேலும் சாலை ஓரங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்த நிலையில் பழனி நெய்க்காரப்பட்டி அருகே அ.கலையம்புத்தூர் பகுதியை சேர்ந்த சங்கர்(60) என்பதும் இவர் காவல்துறையில் காவலராக கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்னர் பணிபுரிந்து விட்டு விருப்ப ஓய்வு அறிவித்துவிட்டு இருப்பதாகவும் தெரியவந்தது. பின்னர் இவரை பிடித்து விசாரித்ததில் காவல்துறையினரே அதிர்ச்சியடைந்தனர் சங்கர் காவல்துறையில் சேர்ந்து 15 ஆண்டுகளே பணிபுரிந்துள்ளார் 1998ல் விருப்ப ஓய்வு கொடுத்துவிட்டு இருப்பதாகவும். இவருக்கு 4 மனைவிகள் 3 பெண் மற்றும் 3 ஆண் வாரிசுகள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. மேலும் பல்வேறு ஊர்களில் கள்ளகாதலிகள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதில் நெய்க்காரப்பட்டியை சேர்ந்த வடிவுக்கரசி என்பவரும் இருந்துள்ளார். மேலும் பல்வேறு பகுதிகளில் அரசு வேலை வாங்கித்தருவதாக சங்கர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதில் வடிவுக்கரசி உறவினர்களிடம் இருந்து லட்சகணக்கில் பணம் அரசு வேலைக்கு வாங்கி கொடுக்க சங்கரிடம் கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. நாளடைவில் அரசு வேலை வாங்கி கொடு அல்லது எனது உறவினர்களுக்கு பணத்தை திருப்பி கொடு என வடிவுக்கரசி வற்புறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூடிய விரைவில் கொடுக்கவில்லை என்றால் போலீசில் புகார் கொடுப்பதாக கூறியுள்ளார். இதனால் அச்சமடைந்த சங்கர் இரண்டு நாட்களில் தருகிறேன் என்று கூறியுள்ளான். இதையடுத்து கடந்த 5ம் தேதி வெள்ளகோவில் அருகே உள்ள ஊரில் எனக்கு பணம் தருகின்றனர் போய் வாங்கி வருகிறேன் என கூறியதாகவும் மேலும் நீயும் கூட வா சென்று வரலாம் என அழைத்துள்ளான். இதை நம்பி வடிவுக்கரசி சங்கருடன் இருசக்கர வாகனத்தில் ஊரில் இருந்து வந்துள்ளார். பின்னர் பணம் தருபவர்கள் வர சிறிது நேரம் ஆகும் இங்குள்ள அணையை சுற்றி பார்க்கலாம் என தெரிவித்துள்ளான். பின்னர் வட்டமலைகரை அணை ஓடையின் மேல் பகுதியில் பைக்கை நிறுத்தி விட்டு காட்டு பகுதிக்கு மதியம் வந்த பின்னர் அங்கு இருவரும் மது அருந்தியதாகவும் தெரிவித்துள்ளான். பின்னர் அருகே கிடந்த கல்லை எடுத்து வடிவுக்கரசியை தலை,கை,கால்,ஆகிய பகுதிகளில் கண்முடித்தனமாக தங்கியுள்ளான். இதில் படுகாயமடைந்து அரை உயிராக சரிந்து கிடந்த வடிவுக்கரசியின் கழுத்தில் இருந்த 6 பவுன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு பெட்ரோல் ஊற்றி தீ பற்ற வைத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி விட்டதாக கூறியுள்ளான். சிசிடிவி காட்சிகளில் வட்டமலை கரை அணைக்கு வரும் பொழுது இருவரும் இருசக்கர வாகனத்தில் வருவதும் திரும்பி செல்லும்போது சங்கர் மட்டும் செல்வதையும் கொலை நடந்த இடத்தில் கிடந்த காலி மதுபாட்டில்கள் பார் கோடுகளை ஆய்வு செய்து கொலையாளியை உறுதிப்படுத்தி தனிப்படை காவலர்கள் 2 நாட்களில் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொலை குற்றவாளி முன்னாள் காவலர் என்பது வெள்ளகோவில் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story