குடும்பத் தகராறு காரணமாக மனைவி மற்றும் மைத்துனர் சரமாரியாக வெட்டி படுகொலை.

குடும்பத் தகராறு காரணமாக மனைவி மற்றும் மைத்துனர் சரமாரியாக வெட்டி படுகொலை.
X
கொலை
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள முத்தையன்செட்டி பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார்.இவரது மகன் பிரதீப் (27) இவருக்கு சின்னமனூரை சேர்ந்த நிகிலா என்பவருடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் முடிந்துள்ளது.இருவரும் முத்தையன் செட்டிபட்டியில் வசித்து வந்த நிலையில், பிரதீப் அமமுக கட்சியில் கிளைச் செயலாளராக இருந்த நிலையில் எந்த வேலைக்கும் செல்லாமல் குடித்துவிட்டு அடிதடி, கட்டப் பஞ்சாயத்து என்று செய்து கொண்டிருந்தார்.மேலும் பல்வேறு வழக்குகளிலும் சிக்கி வந்தார். இதனால் இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தம்பதியினர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதைத் தொடர்ந்து உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி கடந்த வாரம் நிகிலாவை கணவருடன் சேர்த்து வைத்தனர்.இந்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன் இருவருக்கும் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டதில், பிரதீப் நிகிலாவை சரமாரியாக தாக்கினார்.இதில் படுகாயம் அடைந்த அவர் சின்னமனூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில்,பிரதீப் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில்,இன்று இதுகுறித்து பஞ்சாயத்து பேசி முடித்துவிட்டு, தன்னுடைய பொருட்களை எடுத்துச் செல்வதற்காக நிகிலா அவரது அண்ணன் விவேக் (33)மற்றும் 10க்கும் மேற்பட்ட உறவினர்களை அழைத்துக் கொண்டு முத்தையன்செட்டிபட்டியில் உள்ள கணவர் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு சிவக்குமார், பிரதீப் மற்றும் நிகிலாவின் குடும்பத்தினருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. இதில் பிரதீப் கத்தியால் விவேக்கை சரமாரியாக குத்தியதில் விவேக் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். இதனைப் பார்த்த நிகிலா கீழே மயங்கி விழுந்துள்ளார். மயங்கி விழுந்த நிகிலாவை பிரதீப் அரிவாளால் சரமாரியாக வெட்டியும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்தார். இதனைப் பார்த்து அனைவரும் பதறி அடித்து ஓடினார்கள்.இதனைத் தொடர்ந்து சிவக்குமார் மற்றும், அவரது மகன் பிரதீப் ஆகியோர் தலைமறைவாகி விட்டார்கள். இது தொடர்பாக போடி தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு,போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிகிலா மற்றும் அவரது அண்ணன் விவேக்கின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில்,இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய பிரதீப்பை தீவிரமாக தேடி வருகின்றனர். இரட்டை கொலை செய்த பிரதீப் மீது 7-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.மேலும் நிகிலா வழக்கறிஞருக்கு படித்து முடித்துள்ளார்.அவரது அண்ணன் விவேக் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வந்ததும் குறிப்பிடத்தக்கது. குடும்பத் தகராறு காரணமாக இளைஞர் மனைவி மற்றும் மைத்துனரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story