நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணியினை தொடங்கி வைத்து, ஆய்வு மேற்கொண்டார்.
இதன்படி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மத்திய காப்பறையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் முதல் நிலை சரிபார்ப்பு பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.இந்திய தேர்தல் ஆணையத்தால் எதிர்வரும் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் -2026 முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் 2433 கட்டுப்பாட்டு கருவிகள் (Control Unit), 5779 வாக்குப் பதிவு கருவிகள் (Ballot Unit) மற்றும் 2590 வாக்குப் பதிவை சரிபார்க்கும் கருவிகள் (VVPATs) ஆக மொத்தம் 10802 வாக்கு பதிவு கருவிகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டுள்ள பாரத் எலக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்தின் 9 பொறியாளர்கள் தர்லோக் சிங் என்பவர் தலைமையில் முதல் நிலை சரிபார்ப்பு பணிக்கு உட்படுத்தப்படவுள்ளது.முதல்நிலை சரிபார்ப்பு பணியின் மேற்பார்வையாளர் (First Level Checking Supervisor) மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) கோ.குமரன் மேற்பார்வையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் மேற்கண்ட அனைத்து இயந்திரங்களின் முதல் நிலை சரிபார்த்தல் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.இப்பணிக்கு 3 வட்டாட்சியர்கள், 6 துணை வட்டாட்சியர்கள், முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் 2 நபர்களும், கிராம உதவியாளர்கள் 1 சுழற்சிக்கு 18 நபர்கள் என 5 சுழற்சிக்கு 90 நபர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இப்பணியானது இன்று தொடங்கப்பட்டு அனைத்து இயந்திரங்களும் சரிபார்த்து முடிக்கும் வரை சுமார் 22 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். சரியாக உள்ள இயந்திரங்கள் தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.



