நாரைக்கிணறு பகுதியில் மக்கள் சந்திப்பு கூட்டம்: அமைச்சர் மா.மதிவேந்தன் பங்கேற்பு..

X
Rasipuram King 24x7 |16 Dec 2025 7:10 PM ISTநாரைக்கிணறு பகுதியில் மக்கள் சந்திப்பு கூட்டம்: அமைச்சர் மா.மதிவேந்தன் பங்கேற்பு..
நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள நாரைக்கிணறு ஊராட்சிக்கு உட்பட்ட 5 இடங்களில் பொதுமக்கள் சந்திப்புக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன் கலந்துகொண்டு, நாரைக்கிணறு ஊராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர், இந்திரா நகர், இராமநாதபுரம், மாட்டுக்காரன் கோவில், நாரைக்கிணறு மாரியம்மன் கோவில் ஆகிய 5 இடங்களில் நடைபெற்ற முகாம்களில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்போது, பொதுமக்கள் சந்திப்பு முகாம்களில் பொதுமக்களிடம் அமைச்சர் மா. மதிவேந்தன் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பட்டா தொடர்பான கோரிக்கைகளுக்கு, தற்போது நில அளவீடு பணிகள் முடிவடைந்துள்ளதால், விரைவில் பட்டா வழங்கப்படும் என தெரிவித்தார். அப்போது பொதுமக்களிடையே பேசிய அமைச்சர் மா.மதிவேந்தன், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நாரைக்கிணறு, மத்ரூட், மங்களபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, இதுவரை அளவீடு செய்யப்படாத 2,471 ஏக்கர் நிலங்களில் வசிக்கும் விவசாயிகளுக்கு நிலவரி திட்டத்தின் அடிப்படையில் அந்த நிலத்தை அளவீடு செய்து பட்டா வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டதை அடுத்து, கடந்த 2024-ம் ஆண்டுமுதல் அவர்களுக்கு படிப்படியாக பட்டாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 814 நபர்களுக்கு ரூபாய் 33 கோடி மதிப்பீட்டில் 723 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மீதமுள்ள நில அளவீடுகள் முடிக்கப்பட்டுள்ளதால், படிப்படியாக பட்டாக்கள் வழங்கப்படும். இதன் மூலம் மொத்தமாக 1,200-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுவிடும். அதனைத் தொடர்ந்து மீதமுள்ள சாலை வசதிகள், அரசு அலுவலக கட்டடங்கள் கூடுதலாக ஏற்படுத்தி தரப்படும். நாரைக்கிணறு ஊராட்சியில், வனத்துறை அனுமதியுடன் சாலைகள், அங்கன்வாடி, அலைபேசி கோபுரம், சிறு விளையாட்டு மைதானம் ஆகியவை அமைத்து தரப்படும். பட்டா வழங்கியதன் மூலம் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்தாலும் இதுவரை நிலம் சொந்தமில்லாமல் இருந்த நிலை மாறி பட்டா கிடைத்த நாளிலிருந்து உங்கள் நிலம் உங்களுக்கே சொந்தமாகி, உள்ளது. இதன்மூலம் நீங்கள் விவசாய தொழிலை எவ்வித சிரமமும் இன்றி மேற்கொள்ள முடியும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக அரசு, 100 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றவில்லை. ஆனால் அதனை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. தமிழக முதல்வர் கடந்த நான்கரை ஆண்டுகளில், மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை, புதுமைப்பெண், தமிழ் புதல்வன், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டுள்ள, ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, சிறு தகவல் தொழில்நுட்ப பூங்கா, 854 கோடி மதிப்பீட்டில் ராசிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். போதமலைக்கு கடந்த 2006-ம் ஆண்டு திமுக ஆட்சியில் மின்சார வசதி செய்யப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு போதமலைக்கு 140 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சுதந்திரம் பெற்று இதுவரை சாலை வசதி பெறாத போதமலைக்கு திமுக அரசு சாலை வசதி ஏற்படுத்தி தற்போது அங்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து நடைபெற திமுக அரசை ஆதரிக்க வேண்டும் என்றும் அமைச்சர் மருத்துவர். மா. மதிவேந்தன் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நாமகிரிப்பேட்டை வட்டார அட்மா குழுத் தலைவருமான கே.பி.ராமசுவாமி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story
