நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியரே இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் முகாம் நடைபெற்றதைப் பார்வையிட்டார்.
நாமக்கல் மாவட்டத்தில், 92.இராசிபுரம், 93.சேந்தமங்கலம், 94.நாமக்கல், 95.பரமத்தி வேலூர், 96.திருச்செங்கோடு, 97.குமாரபாளையம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. 01.01.2026 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள், அதாவது 31.12.2007 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்கள் மற்றும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காதவர்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் புதியதாக சேர்த்திட வேண்டும். அதன்படி, இளம் வாக்காளர்களிடம் படிவம் 6-ஐ பெற்று தொடர்புடைய பாகம் எண்ணில் சேர்க்கும் பணி சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அந்த வகையில் நாமக்கல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு, படிவம் எண் 6-ஐ வழங்கி பூர்த்தி செய்த படிங்களை திரும்பப்பெற்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு வருகிறது. அனைத்து சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்லூரிகளிலும் தொடர்ந்து முகாம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்றைய தினம் இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது.எனவே 2026 சட்டமன்ற தேர்தலில் 18-வயது பூர்த்தி அடைந்த அனைத்து இளம் வாக்காளர்களும் தங்களது ஜனநாயக கடமையினை ஆற்றிடும் வகையில், கல்லூரி வளாகங்களிலேயே நடைபெறும் முகாம்களில் இளம் வாக்காளர்கள் வாக்குசாவடி நிலை அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் வழங்கப்படும் படிவம் எண் 6-ஐ பெற்று பூர்த்தி செய்து, திரும்ப வழங்கி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரினை சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் இராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்“ முகாமில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், உடனடி தீர்வாக பயனாளிக்கு அரசு நலத்திட்ட உதவியினை வழங்கி, பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.இம்முகாமில் 92.இராசிபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முருகன், ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்கண்ணன் மற்றும் கல்லூரி முதல்வர், கல்லூரி பேராசிரியர்கள், மாணவியர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


